

ஒரு நாட்டின் எதிர்கால பொருளாதார நிலையை பங்குச் சந்தையின் வர்த்தகத்தை வைத்து மதிப்பிடமுடியும். அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. இந்த பங்குகளை வைத்திருக்கும் பொதுமக்கள் அதை விற்கவும், புதிதாக வாங்கவும் பங்குச் சந்தைகள் உதவுகின்றன. நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளை போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கவும், கைவசம் வைத்திருக்கும் நிதி நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வேக, வேகமாகவும் மக்கள் விற்பனை செய்வார்கள்.
இந்தியாவில் பம்பாய் பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை என 2 பங்குச் சந்தைகள் இருக்கின்றன. பம்பாய் பங்குச் சந்தை 30 பெரிய நிறுவனங்களின் பங்கு விற்பனையை சார்ந்து இருக்கிறது. இதை சென்செக்ஸ் குறியீடு என்று அழைக்கிறார்கள். இதேபோல தேசிய பங்குச் சந்தை 50 பெரிய நிறுவன பங்குகள் விற்பனை நிலவரத்தை சார்ந்தது. இது நிப்டி குறியீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தால் இந்தியாவில் நிறுவனங்களுக்கு சாதகமான நிலை இருப்பதையும், பங்குச் சந்தை குறியீடுகள் வீழ்ச்சி அடைந்தால் இந்தியாவில் நிறுவனங்களுக்கு பாதகமான நிலை என்பதையும் அறிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார நிலையையும் கணிக்கமுடியும். பொருளாதாரம் ஏற்ற நிலையில் அதாவது பங்குகளின் விலை ஏறுமுகத்தில் இருக்கும்போது காளையின் பாய்ச்சல் என்றும், பங்குகளின் விலை வீழ்ச்சி அடையும்போது கரடியின் வீழ்ச்சி என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பங்குச் சந்தையும் விடுமுறை இல்லாமல் இயங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்படுவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். உடனே இந்திய பங்குச் சந்தை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்தது. சென்செக்ஸ் 1546.84 புள்ளிகளும், நிப்டி 495.20 புள்ளிகளும் சரிந்தது. இதனால் அன்று ஒரேநாளில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. கரடி வீழ்ச்சியடைந்தது என்று நிபுணர்கள் கூறினார்கள். இதற்கு அடுத்தநாளே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் தங்கள் சமூக வலைதள பதிவில் இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்று அறிவித்தவுடனேயே காளை முன்னங்காலை வான் நோக்கி உயர்த்தி தன் பாய்ச்சலை தொடங்கியது.
சென்செக்ஸ் 4205 புள்ளிகள் உயர்ந்து 2072 புள்ளிகளுடனும், நிப்டி 1252 புள்ளிகள் உயர்ந்து 639 புள்ளிகளுடனும் நிலை பெற்றது. முதலீட்டாளர்களுக்கு ரூ.12.11 லட்சம் கோடி லாபத்தை வாரி வாரி வழங்கியது. இதுபோல கடந்த 7 ஆண்டுகளில் இல்லாதவகையில் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு ரூ.1.25 உயர்ந்தது. ஆக பங்குச் சந்தையின் நிலவரம் மிக சாதகமாக இருக்கிறது. இப்போது பங்குகள் வாங்கலாமா? என்று பங்குச் சந்தை நிபுணரான நாகப்பனிடம் கேட்டபோது, ‘‘பொதுவாக இந்திய பொருளாதாரமும் அதை சார்ந்த பங்குச் சந்தையும் அவ்வப்போது ஏற்ற-இறக்கங்களை சந்தித்தாலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓரளவுக்கு வலுவான நிலையிலேயே இருந்துவருகிறது. இப்போது ஏற்பட்டுள்ள உயர்வு அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைத்ததால் மட்டும் தான்’’ என்கிறார்.