இந்தியாவை உலுக்கிய கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த பிரச்சினையை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கையில் எடுத்து, கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை தொடங்கினர்.

இந்தியாவை உலுக்கிய கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்
Published on

வீடுகளில் கரப்பான் பூச்சி எப்படி இல்லத்தரசிகளை அதிரவைக்குமோ, அதேபோல் தொடங்கி 3 மாதங்கள் கூட ஆகாத கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் இந்தியா முழுவதையும், குறிப்பாக நாடாளுமன்றத்தையும் உலுக்கிவிட்டது. இந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடங்கப்பட்ட பின்னணி மிகவும் சுவாரஸ்யமானதாகும். வேலைவாய்ப்பின்மை மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த், "நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளை போல திரிகிறார்கள். தங்களுக்கென்று எந்த தொழிலும் இல்லாததால், அவர்கள் ஊடகம், சமூக ஊடகம், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் என்ற பெயரில் ஒட்டுண்ணிகளாக மாறி ஒட்டுமொத்த சட்ட அமைப்பையும், நீதித்துறையையும் தேவையின்றி தாக்குகிறார்கள்" என்று கடுமையான வார்த்தைகளால் சாடினார்.

இளைஞர்களை கரப்பான் பூச்சி என்று வர்ணித்ததால் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அதன்தொடர்ச்சியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டி இயக்கத்தை அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய இளைஞர் அபிஜீத் தீப்கே, சமூக வலைதளத்தில் தொடங்கினார். இதற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், தன் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதற்கிடையே அபிஜீத் தீப்கேயும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார். இந்தநிலையில், நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த பிரச்சினையை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கையில் எடுத்து, கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை தொடங்கினர்.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக அதே கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரது உடல்நிலை மோசமானதால், 21 நாட்களுக்கு பிறகு கடந்த 18-ந்தேதி அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 20-ந்தேதி களம் இறங்கினர். இளைஞர் பட்டாளம் பெருங்கூட்டமாக ஜந்தர் மந்தரில் இருந்து, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய 20-ந்தேதியன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்றனர். இதை தடுத்துநிறுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்தனர். எதிர்தாக்குதலால் போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி போர்க்களமானது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகள், மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவை சந்தித்து, கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த ஒரு நாளோடு போராட்டம் முடிந்துவிடவில்லை. டெல்லியில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இளைஞர்களின் போராட்டம் பரவியது. தமிழ்நாட்டிலும் இளைஞர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்த பிரச்சினையால் முடங்கி, கடந்த 4 நாட்களாக எந்த அலுவலும் நடக்கவில்லை. ஆக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் டெல்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்திவிட்டது. ஊழலுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம் எப்படி ஆம் ஆத்மி கட்சியை தோன்ற வைத்ததோ, அதுபோல் நையாண்டி இயக்கமாக தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அரசியல் கட்சியாக உருவெடுக்குமா என்பது போக போகத்தான் தெரியும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com