நியமனத்தில்தான் சர்ச்சை; ராஜினாமாவிலுமா?

தேர்தல் கமிஷனர் அருண் கோயல் திடீரென்று ராஜினாமா செய்தது, நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியமனத்தில்தான் சர்ச்சை; ராஜினாமாவிலுமா?
Published on

அடுத்த சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், தேர்தல் கமிஷனர் அருண் கோயல் திடீரென்று ராஜினாமா செய்தது, நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சட்டப்படி, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி கொண்ட அமைப்பாகும். இது மத்திய அரசாங்கத்துக்கோ, மாநில அரசாங்கங்களுக்கோ கட்டுப்பட்டதில்லை. சர்வ அதிகாரம் கொண்டது. அரசியல் சட்டத்தின் 324-வது பிரிவு, உட்பிரிவு 2-ல் தேர்தல் ஆணையம் ஒரு தலைமை தேர்தல் கமிஷனரைக் கொண்டதாகவும், ஜனாதிபதி அவ்வப்போது நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் தேர்தல் கமிஷனர்களைக் கொண்டதாகவும் இருக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

சுதந்திரம் அடைந்த பிறகு 1950-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது முதல் 1989-ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்தில் ஒரு கமிஷனர் மட்டுமே இருந்தார். 1989-ல்தான் 2 தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களும் 3 மாதங்களில் விலக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுதான் தலைமை தேர்தல் கமிஷனரும், கூடுதலாக 2 கமிஷனர்களும் நியமிக்கப்பட்டு, அந்த நடைமுறைதான் இப்போதும் தொடர்கிறது.

இதற்கு அப்போதைய தலைமை தேர்தல் கமிஷனரான தமிழ்நாட்டை சேர்ந்த டி.என்.சேஷன்தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். இப்போதைய தேர்தல் ஆணையத்திலும் தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமாரும், கமிஷனர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோரும் இருந்தனர். அதில் அனூப் சந்திர பாண்டே கடந்த மாதம் 15-ந்தேதி ஓய்வு பெற்ற நிலையில், இப்போது திடீரென அருண் கோயலும் ராஜினாமா செய்துவிட்டார்.

அருண் கோயல் நியமனத்தின் போதே சர்ச்சை ஏற்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் கூட வழக்கு தொடரப்பட்டது. அவர் மத்திய அரசாங்கத்தில் கனரக தொழில்துறை செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி தன் பதவியில் இருந்து விருப்ப ஓய்வில் வெளியேறினார். அவரது விருப்ப ஓய்வு உடனடியாக ஏற்கப்பட்டது. அடுத்த நாளே அவர், தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை இருக்கும் சூழ்நிலையில், இப்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்ற பிறகு, அருண் கோயல் தலைமை தேர்தல் கமிஷனராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு இருக்கிறது.

திடீரென அவர் ராஜினாமா செய்ததற்கான காரணம், தலைமை தேர்தல் கமிஷனருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே என்று கூறப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில், மேற்கு வங்காளத்தில் ஒரு ஐகோர்ட்டு நீதிபதி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்ததுபோல, அருண் கோயலும் பா.ஜனதாவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போகிறாரோ? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இப்போதைய சூழ்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஒரு மத்திய மந்திரி மற்றும் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் ஆகியோர் கொண்ட தேர்வு குழு, இரு தேர்தல் கமிஷனர்களை, தேடுதல் குழு தாக்கல் செய்யும் தலா 5 பேர் கொண்ட பட்டியலில் இருந்து நாளை தேர்வு செய்து, அவர்கள் நாளை மறுநாள் பதவியேற்பார்கள். அதன்பிறகே, தேர்தல் ஆணையம் அன்றோ, அதற்கு அடுத்த ஓரிரு நாட்களிலோ கூடி தேர்தல் தேதியை அறிவிக்கும். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com