செயற்கை நுண்ணறிவுக்குத்தான் எதிர்காலம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் 23 ஆயிரம் பேர் உள்பட உலகம் முழுவதும் 2.23 லட்சம் பேர் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
செயற்கை நுண்ணறிவுக்குத்தான் எதிர்காலம்
Published on: 

செயற்கை நுண்ணறிவு இப்போது பிரபலமாக இருந்தாலும், அதற்கான அடித்தளம் 1950-களிலேயே அமைக்கப்பட்டது.

ஒப்பன் ஏ.ஐ.

1956-ம் ஆண்டு, அமெரிக்காவின் டார்ட்மவுத் கல்லூரியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், ஜான் மக்கார்த்தி உள்ளிட்ட ஆய்வாளர்கள், 'செயற்கை நுண்ணறிவு' என்ற பெயரில் இந்த துறையை முன்னெடுத்தனர். 1997-ம் ஆண்டு. ஐ.பி.எம். நிறுவனத்தின் டீப் புளூ கணினி, உலக சாம்பியன் கேரி காஸ்பரோவுடன் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று மனிதனைச் செயற்கை நுண்ணறிவால் தோற்கடிக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துக்காட்டியது.

அதன்பிறகு, 2022-ம் ஆண்டு ஒப்பன் ஏ.ஐ. நிறுவனம் சாட்ஜிபிடி என்ற உரையாடல் செயற்கை நுண்ணறிவுக் கருவியை அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து, கூகுள் ஜெமினி, மெட்டா, எலான் மஸ்க்கின் குரோக், சீனாவின் டீப்சீக், குவென் நிறுவனத்தின் ஏ.ஐ. ஆகியவை செயற்கை நுண்ணறிவு களத்தில் இறங்கிவிட்டன.

சில நிமிடங்களில்

இந்தியாவில் உள்ள சர்வம், பாரத்ஜென் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் மத்திய அரசாங்கத்தின் ஏ.ஐ. மிஷன் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு களத்தில் குதித்துள்ளன. இதுதவிர, இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ்.. இன்போசிஸ். எச்.சி.எல்.. விப்ரோ போன்றவை ஏ.ஐ. ஆராய்ச்சி பணிகளைத் தொடங்கியுள்ளன. ஆரம்பத்தில், ஏ.ஐ. சாதாரணமாக ஒரு அலுவலக ஊழியர் செய்யும் கடிதம் தயாரிப்பது, இ-மெயில் அனுப்புவது, வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வது போன்ற பணிகளையே செய்து வந்தது. ஆனால் இப்போது மென்பொருள் உருவாக்கும் என்ஜினீயர்களின் பணிகளையும் செய்யத் தொடங்கிவிட்டது. எடுத்துக்காட்டாக, 50 என்ஜினீயர்கள் சேர்ந்து பல மாதங்கள் உழைத்து உருவாக்கும் ஒரு மென்பொருளை, அதாவது சாப்ட்வேரை, ஏ.ஐ. சில நிமிடங்களிலேயே உருவாக்கி ஆச்சரியப்படுத்திவிடுகிறது.

பணிநீக்கம்

இதன் காரணமாகத்தான் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சாப்ட்வேரை உருவாக்கும் பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பது வெகுவாக குறைந்துவிட்டதோடு, ஏற்கனவே பணியில் இருப்பவர்களையும் வீட்டுக்கு அனுப்பும் படலம் தொடங்கிவிட்டது. இதுமட்டுமல்லாமல், இன்னும் என்னென்ன பணிகளையெல்லாம் ஏ.ஐ. கைப்பற்றுமோ என்ற அச்சம் உலகம் முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் 23 ஆயிரம் பேர் உள்பட உலகம் முழுவதும் 2.23 லட்சம் பேர் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிறுவனம் இப்போது பல பணிகளில் ஏ.ஐ.யைப் புகுத்திவிட்டதால், 60 ஆயிரம் பேரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறது. இந்த வலையில் டேட்டா சென்டர், மார்க்கெட்டிங், விற்பனை, சைபர் செக்யூரிட்டி, குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய பிரிவுகளில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் சிக்கவில்லை. ஆரக்கிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்திருக்கிறது. இதேபோன்று கூகுள். மெட்டா உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

எதிர்காலம் இனி

கல்லூரி மாணவர்கள் செயற்கை நுண்ணறிவில் இப்போதே திறன்களை வளர்த்துக்கொண்டால்தான், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ளமுடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் செயற்கை நுண்ணறிவு சவால்களை மட்டுமல்ல, அதை கற்றறிந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் அள்ளித் தருவதாகும்.

ஒரேநேரத்தில் நன்மை, தீமைகளை தரும் அற்புதமான கண்டுபிடிப்பு. மொத்தத்தில் இசை என்பது ஹார்மோனியத்தில் அல்ல, அதை வாசிப்பவர்களின் விரல்களில்தான் இருக்கிறது என்று கூறுவதுபோல, செயற்கை நுண்ணறிவு பாதிப்பு என்று மட்டும் கூறுவதில் அர்த்தமில்லை. அதை கற்றறிந்தவர்களுக்கு வளங்களையும் வாரி வழங்கும். ஆக எதிர்காலம் இனி செயற்கை நுண்ணறிவை கற்றறிந்தவர்களின் கையில்தான் இருக்கிறது. அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை.

X