முதல்-அமைச்சரை பாராட்டும் கவர்னரின் முதல் உரை

ஆண்டுதோறும் மாநில அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக கவர்னர் உரை இருக்கும். கவர்னர் உரையோடுதான் அந்த ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும்.
முதல்-அமைச்சரை பாராட்டும் கவர்னரின் முதல் உரை
Published on

ஆண்டுதோறும் மாநில அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக கவர்னர் உரை இருக்கும். கவர்னர் உரையோடுதான் அந்த ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும். பட்ஜெட் என்பது அரசின் வரவு, செலவு ஆண்டு அறிக்கை. இதில் அரசின் நிதிநிலை மற்றும் புதியத்திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும். ஆனால் கவர்னர் உரை அரசின் கொள்கையை கோடிட்டு காட்டுவதாகவும், எந்த வழியில் அரசு போகப்போகிறது என்பதை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடியாகவும் இருக்கும். அந்தவகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்று முதல் உரையை நேற்று சட்டமன்றத்தில் ஆற்றினார். கவர்னரின் உரை பற்றி பல எதிர்பார்ப்புகள் இருந்தன. நிச்சயமாக கவர்னருக்கும், அரசுக்கும் உள்ள உறவு இந்த உரையில் எதிரொலிக்கும். கவர்னர் தன் நிலைப்பாட்டை அரசல், புரசலாக தெரிவிப்பார் என்று எல்லோருடைய கண்களும் இந்த உரை மீதே இருந்தன. ஆனால் கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே குறிப்பாக, கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே நல்லுறவே திகழ்கிறது என்பதை இந்த உரை பட்டவர்த்தனமாக எடுத்துக்கூறுகிறது.

இதை உறுதிப்படுத்தும்வகையில், ஆரம்பத்தில் தமிழக மக்களுக்கு தன் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகளையும், பொங்கல் நல்வாழ்த்துகளையும் தெரிவித்த கவர்னர், அடுத்த வரிகளிலேயே முதல்-அமைச்சரை வெகுவாக பாராட்டியிருக்கிறார். பதவியேற்ற முதல் நொடியில் இருந்தே ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும் முடுக்கிவிட்டு, மருத்துவக்கட்டமைப்பை மேம்படுத்தி, ஆக்சிஜனும், அத்தியாவசிய மருந்துகளும் மாநிலமெங்கும் கிடைப்பதை உறுதிசெய்து, தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, கொரோனா பெருந்தொற்றின் 2-ம் அலையை திறம்பட கையாண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மனமார பாராட்டுகிறேன் என்று இதயப்பூர்வமாக பாராட்டிவிட்டு, மாநிலத்தின் பொருளாதாரமும், மக்கள் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிப்படையாமல் கொரோனா பெருந்தொற்றை இந்த அரசு வெற்றிகரமாக கட்டுப்படுத்திய முறை, நாட்டுக்கே முன்னோடியாக அமைந்தது என்றும் புகழாரம் சூட்டினார். அடுத்து அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து பாராட்டிய கவர்னர், முதல்-அமைச்சர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில்சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிசெய்து, பேரிடர் நிவாரணப்பணிகளை முன்னின்று நடத்தியது பாராட்டுக்குரியது எனவும் புகழ்ந்தார்.

அரசின் கோரிக்கைகளையும், மத்திய அரசாங்கத்திடம் விடும் கோரிக்கைகளையும் சுட்டிக்காட்டாமல் இல்லை. எடுத்துக்காட்டாக, சரக்கு சேவை வரி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசாங்கம் நீட்டிக்கவேண்டும் என்று தமிழகஅரசு வலியுறுத்தும் என்று தெரிவித்துள்ளார். 1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி என்ற விரிவான செயல்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருக்கிறார். காவிரிஆற்றில் கர்நாடக அரசால் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை உழவர்நலன்மீது அக்கறை கொண்ட இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறியது காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். மீனவர் பிரச்சினையை பொறுத்தமட்டில், இந்திய மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் நேரடிபேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க ஆவனசெய்யவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறோம் என்பது ஆக்கப்பூர்வமான யோசனையாகும்.

மருத்துவக்கல்லூரி மாணவர்சேர்க்கை தொடங்கவேண்டிய இந்தநேரத்தில், நுழைவுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே தொழில்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றவை என்ற அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கவர்னரே தன் உரையில் முத்துதெறித்ததுபோல கூறிவிட்டார். நீட் தேர்வுவேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு என்று அவரே சொல்லிவிட்டதால், அவர் பரிசீலனையிலிருக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பான தமிழக அரசின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, கோரிக்கையுமாகும். இறுதியில் வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! என்று கூறியது தமிழ்ப்பற்றும், தேசப்பற்றும் கொண்ட எல்லோருடைய மனதையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com