

அமெரிக்கா, ஈரான் போர், அந்த இருநாடுகளை தாண்டி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. ஏனென்றால் உலகின் எரிபொருள் தேவையில் சுமார் 33 சதவீதம் அளவுக்கு வளைகுடா நாடுகள் தான் பூர்த்தி செய்து வருகின்றன. தற்போது அங்கு போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் கச்சா எண்ணெய் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.
அதோடு, ஈரான் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடிவிட்டது. இந்த உற்பத்தி சிக்கல் மற்றும் கப்பல் போக்குவரத்து தடை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகபட்சமாக 119 டாலரை தொட்டது. இன்னும் எவ்வளவு உயரப்போகிறதோ தெரியவில்லை. அதனால் போருக்கு சற்றும் சம்பந்தமில்லாத நாடுகளும் பெரும் பாதிப்பை சந்திக்க தொடங்கி இருக்கின்றன.
குறிப்பாக போர் தொடங்கியதில் இருந்து இந்தியாவிற்கான எரிபொருள் வினியோக சங்கிலி தடைபட்டு இருப்பதால் நம்மிடம் இருக்கும் கையிருப்பு வேகமாக கரைந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உள்ளதால் எவ்வளவு விலை கொடுத்தாலும், எப்படி கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றை கொண்டுவரமுடியும் என்பதுதான் இந்தியாவுக்கு பெரும் சிக்கலாக இருக்கிறது.
பெட்ரோல்-டீசல் இல்லாமல் மோட்டார் வாகனங்களை வேண்டுமானால் ஓரம் கட்டி விடலாம். ஆனால் எரிவாயு இல்லாமல் எப்படி உணவு சமைத்து பசியாற முடியும்? இந்தியாவின் எரிவாயு தேவையில் 50 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களில் கொண்டுவரப்படுகிறது. இப்போது அது தடைபட்டுவிட்டது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசாங்கம் உத்தரவிட்டு இருந்தாலும், யானை பசிக்கு சோளப்பொரி போல அது நிலைமையை முழுமையாக சீரமைக்க வாய்ப்பு இல்லை. இதற்கிடையே, வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை ரூ 60-ம், டீக்கடை, ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர்களின் விலை ரூ.114.50-ம் உயர்த்தப்பட்டது. அதனை கூட சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தால் வீட்டு சிலிண்டரை பதிவு செய்யும் காலம் 25 நாள் என்று உயர்த்தப்பட்டுள்ளது.
பெரிய ஓட்டல்களில் மின்சார அடுப்பை பயன் படுத்துவார்கள் என்றாலும், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கூடுதலாக 30 சதவீதம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என்பதால் உணவு பொருட்களின் விலை விண்ணை நோக்கி சென்றுவிடும். விறகு அடுப்புக்கு செல்லலாம் என்றால் நகரங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதற்கும் தடை இருக்கிறது.
ஓட்டல்கள் மூடப்பட்டால் அந்த உரிமையாளர்களுக்கு மட்டும் இழப்பு என்பதில்லை. ஓட்டல் சாப்பாட்டை மட்டும் நம்பி இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், வெளியூர்களில் இருந்து பிற தேவைகளுக்காக வருபவர்கள் பசியாற என்ன செய்வார்கள்?. வயிற்றை பிடித்துக்கொண்டு வாடவேண்டிய நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆக மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டிய அவசர, அவசியம் ஏற்பட்டுள்ளது.