கேட்பாரற்று கிடக்கும் பழங்களின் அரசன்

கடந்த ஆண்டு ஒரு கிலோ மாம்பழத்தின் விலை அதிகபட்சமாக ரூ.150 வரை விற்பனையானது.
கேட்பாரற்று கிடக்கும் பழங்களின் அரசன்
Published on

முக்கனிகள் என்று அழைக்கப்படும் மா, பலா, வாழை ஆகியவற்றில் முதல் கனி மாம்பழம்தான். மாம்பழம் இந்தியாவின் தேசிய பழமாக விளங்குவது மட்டுமல்லாமல் பழங்களின் அரசன் என்றும் அழைக்கப்படுகிறது. மா மரம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. கி.பி.15-ம் நூற்றாண்டில் கடல்வழியாக இந்தியாவுக்கு வணிகம் செய்ய வந்த போர்த்துக்கீசியர்கள் மாம்பழங்களை ஆசையோடு சுவைத்ததோடு தங்கள் நாட்டுக்கும் எடுத்துச் சென்றனர். அதற்கு 'மேங்கோ' என்று அவர்கள்தான் பெயரிட்டனர். தமிழ்நாட்டில் பரவலாக மா சாகுபடி செய்யப்பட்டாலும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இதுதான் வாழ்வாதாரம். மாம்பழங்களுக்கு இப்போதுதான் சீசன். மாம்பழங்களில் கிளி மூக்கு, அல்போன்சா, மல்கோவா, நீலம், பங்கனப்பள்ளி, செந்தூரா, இமாம்பசந்த், காசா லட்டு, தோத்தாப்புரி, ருமானி போன்ற ரகங்கள்தான் மிகவும் பிரபலமானவை. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழத்தின் விலை மிகவும் உச்சத்தில் இருக்கும்.

கடந்த ஆண்டு ஒரு கிலோ மாம்பழத்தின் விலை அதிகபட்சமாக ரூ.150 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.40-க்கு கீழே வந்தபோதிலும், வாங்குவதற்கு ஆள் இல்லை. மேலும் சில விவசாயிகள் மீன்களுக்கு உணவாக நீர்நிலைகளில் கொட்டினர். மாம்பழம் சில நாட்களில் அழுகிவிடும் என்பதால் வியாபாரிகளும் மொத்தமாக வாங்கி விற்க தயாராக இல்லை. மேலும் மாம்பழ கூழ் தயாரிக்க வாங்கப்படும் தோத்தாப்புரி மாம்பழங்களும் கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது. மாம்பழ கூழ் தொழிற்சாலைக்கு 10 டன் மாம்பழங்களை கொண்டுபோனால் 3 டன் மாம்பழத்தை கழித்துவிட்டு டன் ஒன்றுக்கு ரூ.3,500 முதல் ரூ.4 ஆயிரம் வரைதான் தருகிறார்கள். கிலோ கணக்குப்படி பார்த்தால் ரூ.4-க்கு கூட வரவில்லை.

இந்த தொகை மரத்தில் இருந்து பறிப்பதற்கான கூலி, போக்குவரத்து கூலி மற்றும் சாகுபடி செலவை கணக்கிட்டால் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருப்பதால் பலர் பறிக்காமல் மரத்திலேயே அழுகவிட்டுவிடுகிறார்கள். மேலும் பல விவசாயிகள் சந்தைக்கோ, தொழிற்சாலைக்கோ கொண்டுபோகாமல் சாலையோரம் கொட்டிவிடுகிறார்கள். இதேநிலைதான் ஆந்திரா, கர்நாடகா விவசாயிகளுக்கும் இருந்தது. ஆந்திர அரசு கொள்முதல் விலையை ரூ.12 என்று நிர்ணயம் செய்துள்ளது. இதில் ரூ.8 மாம்பழ கூழ் தொழிற்சாலையின் பங்காகவும், ரூ.4 மாநில அரசின் பங்காகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் கொண்டுவரவும் தடைவிதித்துள்ளது.

இதுபோல மத்திய அரசாங்கம் விலை வீழ்ச்சி பட்டுவாடா திட்டத்தின் கீழ் கர்நாடக விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,616 வீதம் அதிகபட்சமாக 2 லட்சம் டன் மாம்பழத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அரசின் சந்தை தலையீட்டு திட்டத்தில் தற்போதுள்ள மாம்பழ விற்பனை விலைக்கும், சந்தை தலையீட்டு விலைக்கும் உள்ள வித்தியாசத்தை நேரடியாக விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கவேண்டும் என்றும், மத்திய கொள்முதல் நிலையங்கள் மூலம் தமிழக விவசாயிகளின் மாம்பழங்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மாம்பழ கூழ்-க்கான ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கவும் வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில் தமிழக அரசும் ஆங்காங்கு மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கி விவசாயிகளிடம் இருந்து நல்ல விலையில் மாம்பழங்களை கொள்முதல் செய்யவேண்டும். நஷ்டத்தை ஈடாக்க இப்போது இழப்பீடு வழங்கவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com