

எல்லா நன்மைகளுக்கும் மேலான நன்மை என்றால், அது குறை உள்ளவர்களின் கஷ்டங்களை கேட்டு, அதை நிவர்த்தி செய்வதுதான். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பே மாவட்டந்தோறும் பிரசாரம் செய்த நேரத்தில், மக்களிடம் கோரிக்கை மனுக்களை மேடையிலேயே ஒரு பெட்டிவைத்து பெற்றுக்கொண்டார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், முதல் ஆணையிலேயே, அந்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய ஒரு தனித்துறை அமைக்கப்படும் என்று கூறினார்.
இப்போது அதற்காக, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற தனித்துறை அமைக்கப்பட்டு, சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் என்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் நியமித்துள்ளார். குறைகளில் பெரும்பாலானவை தீர்க்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தலைமைச்செயலாளர் இறையன்புவும் தனக்கு மக்களிடம் இருந்துவரும் மனுக்களை படித்து முக்கிய கடிதங்களுக்கு தன் கைப்படவே கடிதம் எழுதி பதிலளித்து வருகிறார்.
சமீபத்தில், சாலையில் கிடந்த தங்க நகையை போலீஸ் நிலையம் சென்று ஒப்படைத்த தூய்மைப்பணியாளர் மேரியையும், சமூக சேவையாற்றிவரும் திருவான்மியூர் தபால்காரர் மூர்த்தியையும் பாராட்டி கடிதம் எழுதியதோடு, தன் அலுவலகத்திற்கு வரவழைத்து பொன்னாடை அணிவித்து பரிசுகளும் வழங்கினார். அதிகாரிகள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றல்ல, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே தனக்கு வரும் கடிதங்களை எல்லாம் பார்த்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவருவது, அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருவேடகம் கிராமத்தை சேர்ந்த ஏழை மாணவியான ஷேபனா, தான் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சியடைந்தும் கல்லூரியில் சேர முடியாதநிலை இருப்பதால், தனக்கு உதவி செய்யுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கைப்பட ஒரு கடிதம்தான் எழுதினார். இந்த கடிதத்தை படித்த மு.க.ஸ்டாலின், உடனடியாக மாணவி ஷோபனாவுக்கு மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயில ஏற்பாடு செய்தார்.
இதைத்தொடர்ந்து, ஷோபனா, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். என் வாழ்வில் கல்வி மூலம் ஒளியேற்றிய தங்களை நேரில் சந்தித்து நன்றிகூற விரும்புகிறேன். ஆனால், போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாததால், என்னால் வர இயலவில்லை என்று எழுதி தன் நன்றியை தெரிவித்தார். இந்தநிலையில், கடந்த வாரம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி பணியை பார்க்கவும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவும் மதுரை சென்ற மு.க.ஸ்டாலின், அந்த மாணவி வீட்டிற்கு அரசு வாகனத்தை அனுப்பி, ஷோபனா, தாய் முருகேஸ்வரி, தந்தை மனோகர், தங்கை ஆகியோரை வரவழைத்து, வாழ்த்து தெரிவித்து அவர்களை மகிழ்ச்சியால் திக்குமுக்காடச் செய்தார். மாணவி ஷோபனாவும், அவரது குடும்பத்தினரும் கண்ணீர்மல்க முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
மாணவியையும், அவரது தங்கையையும் தட்டிக்கொடுத்து, பட்டப்படிப்புக்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவியும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், நன்றாக படிக்கவேண்டும் என்றும் வாழ்த்தினார். எங்கள் வீட்டுக்கு முன்னால், கார் வந்து நின்றது. அம்மா... கவர்மெண்ட் கார் வருதுன்னு என் தாயாரிடம் சொன்னேன். எங்களை அரசு காரில் அழைத்துக்கொண்டு மதுரை சென்றார்கள். அங்கே போய் நான் முதல்-அமைச்சரை பார்த்தேன். முதல்-அமைச்சரை நேரில் பார்ப்பேன் என்று கனவில்கூட நான் நினைக்கவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று ஷோபனா கூறினார்.
உயர்கல்வி படிக்க உதவிகேட்டு கடிதம் எழுதிய ஒரு ஏழை மாணவிக்கு அதை செய்து கொடுத்ததோடு, மதுரைக்கு சென்ற நேரத்தில், அதை நினைவில் வைத்து, குடும்பத்தோடு வரவழைத்து வாழ்த்தி உதவி செய்த மு.க.ஸ்டாலினின் மனிதாபிமான செயல் நிச்சயம் போற்றுதலுக்குரியது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோல உதவிகோரும் மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி எடுக்கும்போதுதான் மக்களின் மனமும் குளிரும், அரசின் மீதான மதிப்பும் பெருகும்.