தடுப்பூசி போட்டாலும் முககவசம் கட்டாயம் தேவை!

கொரோனா பரவல் இந்தியாவில் குறைந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணமான தடுப்பூசி போடும் பணி இந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கியது.
தடுப்பூசி போட்டாலும் முககவசம் கட்டாயம் தேவை!
Published on

கொரோனா பரவல் இந்தியாவில் குறைந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணமான தடுப்பூசி போடும் பணி இந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கியது. முதலில் டாக்டர்கள், நர்சுகள் போன்ற மருத்துவ பணியாளர்களுக்கும், தொடர்ந்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணைநோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போடப்பட்டது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும்பணி தொடங்கியது. மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும்பணிகள் தொடங்கப்பட்டன.

இந்தியா முழுவதும் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கை அடுத்த சில நாட்களில் எட்டிவிடுவோம். தமிழக அரசும் நேற்று காலை வரை 5 கோடியே 29 லட்சத்து 91 ஆயிரத்து 234 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எல்லாம் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்து எழுந்துவருகிறது. கோவேக்சின் தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் 2 முதல் 18 வயதுவரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சோதனையை நடத்தி முடித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், 2 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை போடுவதற்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு வாரிய நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆக, 2 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போடும்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி போடுவது நிச்சயம் கொரோனா வராமல் தடுக்க ஒரு பாதுகாப்பு கேடயம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால், அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் என்றால், அது முககவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும், கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் சானிடைசர் போட்டு கழுவுவதும்தான். என்றாலும் தடுப்பூசி போட்டவர்களில், குறிப்பாக 2 டோஸ் போட்டவர்களில் பலருக்கு, இனி எதற்கு முககவசம். நாம் ஏன் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். இனி நமக்கு எங்கே கொரோனா வரப்போகிறது? என்ற அலட்சிய மனப்பான்மை காணப்படுகிறது.

அதனால்தான், ஒரு பக்கம் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகின்ற நேரத்தில், மற்றொரு பக்கம் முககவசம் அணிபவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. திருமணங்கள், சாவு ஊர்வலங்கள் போன்றவற்றில் கட்டுப்பாடுகளை மீறி ஏராளமானவர்கள் கூட்டம் கூடுவதை காணமுடிகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்தவர்கள் கண்டிப்பாக முககவசத்தோடு வரவேண்டும் என்று உத்தரவு இருந்தாலும், அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு முககவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

இந்தநேரத்தில், ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் கேரளாவிலிருந்து வெளிவந்துள்ளது. அங்குதான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. 93 சதவீதம் பேருக்குமேல் அங்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. என்றாலும், கேரள மாநில சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்ட தடுப்பூசி ஆய்வு அறிக்கையில், கடந்த வாரம் திங்கட்கிழமை மட்டும் 6,996 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களில் 3,841 பேர் தடுப்பூசி போட்டவர்கள் என்றும், அவர்களில் 2,089 பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, 3 நாட்களில் உயிரிழந்தவர்களில் 57 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணம், கொரோனா தடுப்பூசி போட்டு மாதங்கள் ஆக.. ஆக.. அதன் வீரியம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால், தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் நேரத்தில், மற்றவர்களைவிட குறைவாகவே உடலில் கோளாறுகள் ஏற்படுகின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தடுப்பூசி போட்டவர்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும் என்பது கேரள ஆய்வு அறிக்கையிலிருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com