

தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 இடங்களில் 108-ல் விஜய் தலைமையிலான த.வெ.க. வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. நேற்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விஜய் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.
தடைகளை தாண்டி ஓடும் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் எப்படி பல தடைகளை தாண்டிக் கொண்டே ஓடி இலக்கை அடைவார்களோ, அதுபோல இந்த இலக்கை விஜய் பல தடைகளை தாண்டி எட்டியிருக்கிறார். பொதுவாக தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதுதான் மரபு. ஆனால் முதல் முறையாக கவர்னர் அர்லேகரை, விஜய் சந்தித்தபோது காங்கிரசுடன் கரம் கோர்த்து கூட்டணி ஆட்சியமைக்க உள்ளதாக கடிதம் கொடுத்திருந்தார்.
இதனை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்ட கவர்னர், ஆதரவளிக்கும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள்கொண்ட பெரும்பான்மை பட்டியலையும் தரவேண்டும் என்று கூறி ஆட்சியமைக்க பச்சைக் கொடி காட்ட மறுத்துவிட்டார்.
அதன்பிறகு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவு கடிதத்தையும் பெற்று விஜய் கவர்னரிடம் கொடுத்தார். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு மேல் உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால் ஆட்சியமைக்க வாசலை திறந்த கவர்னர், விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்துவிட்டு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தார்.
47 உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க.வில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையிலான உறுப்பினர்கள் விஜய் பக்கம் வந்துவிட்டனர். சட்டசபையில் விஜய் ஆட்சியின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி தலைவர்களும் பேசிய பிறகு விஜய் பதில் அளித்தார்.
அப்போது முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று உறுதி அளித்தது பாராட்டுக்குரியது. ஆக இந்த மாதம் பெண்களுக்கு ரூ.1,000 கொடுக்கும் மகளிர் உரிமை திட்டம், மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடரும் என்பது தமிழக மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
அரசியல் நாகரிகத்தோடு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்த விஜய், இப்போது தி.மு.க. அரசின் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்று கூறியிருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. இதையடுத்து நடந்த ஓட்டெடுப்பில் 59 தி.மு.க. உறுப்பினர்கள், தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர். ம.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வரவில்லை.
எண்ணி கணிக்கும் முறைப்படி ஓட்டெடுப்பு நடந்தது. 171 உறுப்பினர்கள் பங்கேற்ற வாக்கெடுப்பில் அரசு மீது நம்பிக்கை வைக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக 144 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 22 பேரும் வாக்களித்தனர். 5 பேர் நடுநிலை வகித்தனர். இதனால் விஜய்யின் ஆட்சிக்கு இனி எந்த பாதிப்பும் இல்லை. அவர் நினைத்த லட்சிய ஆட்சி பயணத்தை தடையின்றி தொடரமுடியும். விரும்பிய தமிழ்நாட்டையும் உருவாக்க முடியும்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு 22 பேரும், எஸ்.பி.வேலுமணிக்கு 25 பேரும் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.வில் யார்? யார்? எந்த அணியில் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடையை கொடுத்திருக்கிறது. அதுபோல 4 உறுப்பினர்களை கொண்ட பா.ம.க., ஒரு உறுப்பினரை கொண்ட பா.ஜனதா ஆகியவை வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.