இதுதான் நம்ம சர்க்கார்!

நம்ம சர்க்கார் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் 22 மாநிலங்களில் ஆட்சியை முத்திரையாக பதித்து இருக்கிறார்கள்.
இதுதான் நம்ம சர்க்கார்!
Published on

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தந்துள்ளன. மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகிய 3 பேர் தான் மத்திய பா.ஜனதா அரசின் புதிய கல்விக்கொள்கை, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் உள்பட பல விஷயங்களில் தங்களின் பலமான எதிர்ப்பு குரலை பதிவு செய்து கொண்டு இருந்தார்கள். மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்ததால்தான் இந்த 3 மாநிலங்களிலும் கவர்னர்களை வைத்து, அங்கு நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் தடைக்கல் போடப்பட்டு வந்தது. இதற்காக அவர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களின் கதவுகளை தட்டி சாதகமான முடிவுகளை பெறும் நிலை இருந்தது.

மாநில நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து குரல் கொடுத்து வருவதால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகிய 3 பேருமே உறுதியாக நம்பிக்கொண்டு இருந்தனர். அதற்கு துணையாக தங்கள் தேர்தல் வாக்குறுதிகள் நிற்கும் என்றும் அவர்கள் கூறினர். ஆனால் நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்றாக இருந்தது. மேற்கு வங்காளத்தில் 3 முறை முதல்-மந்திரியாக இருந்த மம்தா பானர்ஜி மோசமான தோல்வியை தழுவினார். பா.ஜனதா மெல்ல மெல்ல கால்தடம் பதித்து, மேற்கு வங்காளத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது. தேர்தல் நடந்த 293 இடங்களில், 208-ல் பா.ஜனதா வெற்றி பெற்று காவி கொடியை நாட்டி விட்டது.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக ஆட்சி அமைப்பார் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவைப்படுவதால், ஆட்சியில் பங்கு என்ற தூண்டில் போட்டு பல கட்சிகளை இழுக்க தொடங்கி விட்டது. அதுபோல கேரளாவிலும் பினராயி விஜயனின் ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி விடை கொடுத்துவிட்டது. இதனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அசாமில் பா.ஜனதா தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. புதுச்சேரியிலும் பா.ஜனதா அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தனது ஆட்சியை தொடருகிறது.

மேற்கு வங்காள தேர்தல் வெற்றி, பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி பயணத்தில் ஒரு மைல்கல் ஆகும். அவர் 2014-ல் பிரதமராக பதவியேற்ற நேரத்தில் 7 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா அல்லது அது அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஆனால் இப்போது பா.ஜனதா தனியாக மற்றும் கூட்டணியாக என 22 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. நமது நாட்டை பொறுத்தமட்டில் மாநில கட்சிகளின் ஆளுகையின் கீழ் இப்போது இருக்கும் 3 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இருந்தாலும் நாட்டின் 78 சதவீத மக்கள் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆளுகையில்தான் இருக்கின்றனர். இதுதான் நம்ம சர்க்கார் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் 22 மாநிலங்களில் ஆட்சியை முத்திரையாக பதித்து இருக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com