

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததால், அந்த நாட்டுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான கதவு அடைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கதவு மூடினால் என்ன?, ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன், போர்ச்சுக்கல், இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், ஆஸ்திரியா உள்பட 27 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனோடு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
20 ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது பிரதமர் மோடியின் வரலாற்று சாதனையாகும். இதனால் 27 நாடுகளின் கதவுகள் ஏற்றுமதிக்காக திறந்துள்ளன.
இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா ஒண்டர் லேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக இவர்கள் இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். அப்போது உர்சுலா தனித்துவமான பனாரஸ் பட்டு உடையை அணிந்திருந்தார். இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் பரஸ்பர வர்த்தகம் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக இருக்கிறது.
இதில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.6.4 லட்சம் கோடியாகவும், இறக்குமதி ரூ.5.1 லட்சம் கோடியாகவும் இருந்து நமக்கு உபரி வர்த்தகமாக இருக்கிறது. மேலும் இருதரப்புக்கும் சேவை வர்த்தகம் கடந்த 2024-ம் ஆண்டில் ரூ.7.2 லட்சம் கோடியாக இருந்தது. உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ஐரோப்பிய யூனியன் 2-வது இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும் உள்ளது. இந்த இரு நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றிணைவதால் உலக பொருளாதாரத்தில் 25 சதவீதத்தை இரு நாடுகளும் தன்வசம் வைத்திருக்கும்.
தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை தரும் ஜவுளி, ஆடைகள், தோல் பொருட்கள், காலணிகள், கடல்சார் உணவுகள், விலையுயர்ந்த கற்கள், நகைகள், ரசாயனங்கள், பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்கு இனி பூஜ்யம் வரி அதாவது வரியே இல்லாமல் ஏற்றுமதி செய்யமுடியும். இதனால் பெண்கள், கைவினை கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பெருகும்.
இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் வலுவடையும். இதுபோல ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்திரங்கள், மின்சாரசாதனங்களுக்கு இப்போது விதிக்கப்படும் 44 சதவீத வரி இனி பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளதால், இந்த பொருட்களின் விலையெல்லாம் இந்தியாவில் கணிசமாக குறையும். விலையுயர்ந்த ஆடம்பர கார்களை நடுத்தர மக்களும் வாங்கும் அளவுக்கு இந்த வரிச்சலுகை வழிவகுப்பதாக இருக்கும்.
இதுதவிர ஒயின், மது வகைகளுக்கும் வரி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆலிவ் ஆயிலுக்கு இனி வரி கிடையாது. இதுபோல நாம் இறக்குமதி செய்யும் 96 சதவீத பொருட்களின் விலை குறைந்துவிடும். இப்படி இரு நாடுகளுக்கும் அளவில்லா நன்மைகளை அள்ளித்தரும் இந்த ஒப்பந்தத்தை அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் ஒப்பந்தம் என்று உர்சுலா சொன்னதை பிரதமர் மோடியும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டது மிகவும் பொருத்தமானதாகும்.
மேலும் அப்போது பேசிய ஆண்டோனியோ கோஸ்டா, “நான் வெளிநாடுவாழ் இந்தியன், எனது வம்சாவளி கோவா” என்று பெருமையோடு கூறினார். தற்போது ஐரோப்பிய யூனியனுக்கு, இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 20 சதவீதம் இருப்பதால், தமிழகத்திற்கும் மிகப்பெரிய பலன் கிடைக்க போகிறது.