கச்சத்தீவை மீட்க இதுதான் துருப்புச் சீட்டு

2009-ம் ஆண்டுக்கு பிறகு, தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்கள் படகுகளை கைப்பற்றி கொண்டுபோவதும் தொடர்கதையாகி போய்விட்டது.
கச்சத்தீவை மீட்க இதுதான் துருப்புச் சீட்டு
Published on

2009-ம் ஆண்டுக்கு பிறகு, தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்கள் படகுகளை கைப்பற்றி கொண்டுபோவதும் தொடர்கதையாகி போய்விட்டது. தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு முறையும் அவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுவதும், அவர்கள் தூதரக உறவுகளை பயன்படுத்தி மீனவர்களை விடுதலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது. கைப்பற்றப்படும் படகுகள் உடனடியாக விடுவிக்கப்படாமல் இலங்கை துறை முகத்திலேயே நிறுத்தி வைக்கப்படுவதால் பராமரிப்பின்றி பயனற்று போய்விடுகிறது. இலங்கை கடற்படையினர்தான் தமிழக மீனவர்களை தாக்குகிறார்கள் என்றால், இப்போது இலங்கை மீனவர்களும் தாக்க தொடங்கி விட்டார்கள்.

சமீபத்தில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கியதால் 3 பேர் காயமடைந்த னர். அதேபோல, கடந்த திங்கட்கிழமை கோடியக்கரைக் கும், ஆறுகாட்டுத்துறைக்கும் இடையில் தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை, 2 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் தாக்கியதால் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இனிமேலும் இந்த கொடுமை நிகழாமல் இருக்கவேண்டும் என்றால் கச்சத்தீவை மீட்பது ஒன்றுதான் ஒரேவழி. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையின் போதும் அரசியல் கட்சிகள் கச்சத்தீவை மீட்போம் என்று வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. இப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று 1974-ம் ஆண்டில் இருந்து தி.மு.க., மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1974-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மீன்பிடிப்பதற்கும், மீன் வலைகளை உலர்த்துவதற்கும், தேவாலயத்தில் வழிபாடு நடத்துவதற்குமான உரிமைகள் தொடர்பான பிரிவுகள், 1976-ம் ஆண்டு அவசரநிலை காலத்தில் பறிக்கப்பட்டன. இதன் காரணமாக அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால், தமிழக மீனவர்களை பாதுகாத்திட கச்சத்தீவை திரும்ப பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், முந்தைய தி.மு.க. ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க ஜெயலலிதாவால் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தொடர் சட்டப்போராட்டம் நடத்தி கச்சத்தீவை மீட்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ராமநாதபுரத்தில், மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங், நிருபர்களிடம் பேசும்போது, கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழகத்துக்கு சாதகமான நிலையே ஏற்படும். இலங்கை அரசுடன் இந்திய வெளியுறவுத்துறை, வேளாண் மற்றும் மீனவ நலத்துறை மந்திரிகள் தொடர்ந்து பேசிவருகின்றனர் என்றார்.

இதையே அடுத்த ஆட்சிக்கு வரும் தமிழக அரசு, துருப்புச் சீட்டாக கையில் எடுத்து கொள்ளவேண்டும். எங்கள் மண்ணிலேயே வந்து, நீங்கள்தானே கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் சாதகமான நிலையே ஏற்படும் என்று கூறினீர்கள் என்பதை எடுத்துக்கூறி, கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இரு கட்சிகளுமே தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்பது குறித்து கூறிவிட்டது. அடுத்த தேர்தலில் மக்களை சந்திக்கும்போது நிச்சயமாக மக்கள் கேட்பார்கள். சமீபத்தில் தினத்தந்தியில் கூட 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. நிறைவேற்றிய, நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. எனவே ஆட்சிக்கு வரப்போகும் அரசியல் கட்சி, கச்சத்தீவை மீட்பதை முதல் பணியாக எடுத்துக்கொண்டு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரு அவைகளிலும் இதை தீவிரமாக வாதாடி, போராடி பெறவேண்டும். அடுத்த தேர்தலில் மக்களை சந்திக்கப்போகும் ஆளுங்கட்சி, தேர்தல் அறிக்கையில் கூறியபடி, நிறைவேற்றிய வாக்குறுதிகளை பட்டியலிடும்போது, கச்சத்தீவை மீட்டுவிட்டோம் என்ற வாசகமும் இடம்பெறும் வகையில் முழு மூச்சாக செயல்படவேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com