பொன் கோடி விளையப்போகும் தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில் விண்வெளி உற்பத்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.
பொன் கோடி விளையப்போகும் தூத்துக்குடி
Published on
Updated on

தமிழ்நாட்டின் உப்பு தலைநகரான தூத்துக்குடி இப்போது பொன் கோடி விளையும் தமிழகமாக உருவெடுத்துக்கொண்டு இருக்கிறது. தூத்துக்குடியை மற்ற நகரங்களோடு, நாடுகளோடு இணைக்கும் வகையில் அங்கு துறைமுகம், விமான நிலையம், ரெயில் நிலையங்கள் மற்றும் சாலை வசதிகள் இருக்கின்றன. அதுபோல நல்ல தட்பவெட்ப சூழல் நிலவுவதாலும், அரசு எடுக்கும் முயற்சிகளாலும் தொழில் வளர்ச்சி வேகமாக தலையெடுத்துக்கொண்டு இருக்கிறது. தூத்துக்குடி சரித்திர காலம் தொட்டு கடல்வழி வாணிபத்துக்கும். முத்துக்குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் முத்து நகரம் என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 7-ம் நூற்றாண்டு மற்றும் 9-வது நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஆட்சியில் இங்கு துறைமுகம் பயன்பாட்டுக்கு வந்தது. இது மன்னார் வளைகுடா பகுதியில் இயற்கையாக அமைந்திருக்கும் எழில்மிகு துறைமுகமாகும்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 2 சுதேசி கப்பல்களை தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஓட்டினார். தூத்துக்குடியில் ஆழ்கடல் துறைமுகம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை 1914-ம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. ஆனாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாமலேயே இருந்தது. பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக தூத்துக்குடி துறைமுக திட்டத்துக்கான கட்டுமான பணிகள் கடந்த 1964-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது 1974-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி கட்டுமான பணிகள் முடிந்து தூத்துக்குடி துறைமுகம் திறந்து வைக்கப்பட்டதோடு, இந்தியாவின் 10-வது துறைமுகமாகவும் அறிவிக்கப்பட்டது.

பெருகிவரும் கப்பல் போக்குவரத்தை சமாளிக்க வெளி துறைமுகம் அமைக்கும் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் இந்த துறைமுகத்தால் பல தொழில்கள் வளர்ச்சி கண்டுள்ளன. சமீபத்தில் அங்கு உற்பத்தியை தொடங்கியுள்ள வின்பாஸ்ட் கார் கம்பெனி உலகம் முழுவதும் புகழ் கொடியை நாட்டியுள்ளது. இப்போது ரூ.38 ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தென்கொரியா நாட்டின் எச்டி ஹூண்டாய் நிறுவனம் அதிநவீன கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தென்கொரியாவில் உள்ள அந்த நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தையும் நேரில் பார்வையிட்டார். தமிழகம் முழுவதும் பல துணை தொழில்கள் மற்றும் உள்ளூர் வினியோக சங்கிலி மூலம் மேலும் பல வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கு இந்த கப்பல் கட்டும் தளம் உந்து சக்தியாக இருக்கும். தூத்துக்குடி துறைமுகத்தின் ஏறுமுகத்தை கண்டு தைவான் நாட்டை சேர்ந்த 3 கம்பெனிகளும் காலடி எடுத்து வைக்க உள்ளன.

இதுபோல தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில் விண்வெளி உற்பத்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. அங்கு விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்பவசதி மையமும் அமைக்கப்படுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த தொழில்பூங்கா அங்கு நிறுவப்படவுள்ள ஏவுகணை தளம் அதாவது ராக்கெட் தளத்தின் அருகாமையில் அமைகிறது. தூத்துக்குடியில் அசுர வேகத்தில் ஏற்படப்போகும் முன்னேற்றம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் என்பதோடு மட்டுமல்லாமல், நேரடி வேலைவாய்ப்புகளாக ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரத்தையும் கொடுக்கும். விண்வெளி உற்பத்தி பூங்காவை சார்ந்து துணை தொழில்கள் உதயமாவது மட்டுமல்லாமல், மறைமுக வேலைவாய்ப்புகளும் இளைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக இருக்கும். இந்த வளர்ச்சி தூத்துக்குடி மாவட்டத்துக்கு நல்ல எதிர்காலத்துக்கான வாசலை திறந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com