நிதி உதவி பெற விவசாயிகளே பதிவு செய்யலாம்

விவசாயம் நாடு முழுவதும் லாபகரமான தொழிலாக இருந்தால்தான், விவசாயிகளின் வாழ்வு வளம்பெறும். நாட்டின் பொருளாதாரமும் உயரும். அப்படிப்பட்ட விவசாயிகளின் வாழ்வில் இப்போது விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்காததால் பெருத்த வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிதி உதவி பெற விவசாயிகளே பதிவு செய்யலாம்
Published on

அவர்களுக்கு உதவி செய்யும் வகையில், இந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு அதுவும் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு, 3 தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி அதாவது, பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி என்று அழைக்கப்படுகிறது இந்தத் திட்டம்.

மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்து விவசாயிகளுக்கும் இந்த ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத்திட்டத்தின் பலனை பெறுவதற்கு அதுதொடர்பான ஆவணங்களை விவசாயிகள் விண்ணப்பித்தபிறகு, மாநில அரசு அந்த விவரங்களை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகள், விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்கிறார்களா என்று பார்த்து ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பிறகுதான் இந்த பதிவேற்றத்தை அரசு செய்யும். விவசாயிகளுக்கு முதல் தவணை கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்பட்டது. செப்டம்பர் 30-ந் தேதிக்குள் (இன்று) முதல் 2 தவணைகளான ரூ.4 ஆயிரத்தை வழங்கி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 47 சதவீத விவசாயிகள்தான் இந்த நிதி உதவியை பெற பதிவு செய்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க மத்திய அரசு தரும் நிதி. இதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பெற்றுத்தர போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த ஒரு ஆண்டோடு இந்தத்திட்டம் முடிவடைந்துவிடுவதில்லை. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் இந்தத்திட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். எனவே, இப்போது தங்கள் விவரத்தை பதிவேற்றம் செய்யும் விவசாயிகளுக்கு எல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும். அதிக விவசாயிகள் இந்த நிதி உதவியை பெறவேண்டும் என்ற சீரிய நோக்கத்தில், மத்திய அரசு இப்போது விவசாயிகள் தாங்களாகவே இந்தத்திட்டத்தின் இணையதளத்தில் சுய பதிவு செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. உடனடியாக பொதுமக்கள் பலன்பெற இந்த இணையதளம் செயல்பாட்டுக்கு வரும். இந்தத்திட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்து நிதி பெறாத விவசாயிகளும் அது நிறுத்தி வைக்கப்பட்டதற்கான குறைபாடுகளை தாங்களாகவே சரி செய்து கொள்ள முடியும். இ-சேவை மையங்களில் இவ்வாறு சுய பதிவு செய்வதற்கு விவசாயிகள் என்னென்ன ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என்பதை தமிழக அரசு விளம்பரப்படுத்தி, உடனடியாக மத்திய அரசு தரும் உதவியை அனைத்து விவசாயிகளுக்கும் பெற்றுத்தரவேண்டும். அனைத்து விவசாயிகளும் இந்த ரூ.6 ஆயிரத்தை கிராமப்புற பகுதிகளில் செலவழிக்கும் நேரத்தில் கிராம பொருளாதாரமும் சற்று உயரும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com