

கரிசல் சீமையான விருதுநகர் மாவட்டம் இயற்கையிலேயே வறட்சி மிகுந்தது என்பதால், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை தாங்கிப் பிடிக்கும் முதன்மைத் தொழில்களாக பட்டாசு உற்பத்தி, தீப்பெட்டித் தயாரிப்பு மற்றும் அச்சுத் தொழில் ஆகியவை விளங்குகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 90 சதவீதத்தையும், தீப்பெட்டி தயாரிப்பில் 80 சதவீதத்தையும் சிவகாசி உள்ளிட்ட விருதுநகர் மாவட்ட பகுதிகள்தான் பூர்த்தி செய்கின்றன. இதன்மூலம் இந்திய அளவில் இந்த தொழில்களில் விருதுநகர் மாவட்டம் கொடி கட்டி பறக்கிறது. அந்த மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய தாலுகாக்களில் மட்டும் 1,200-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் 3½ லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 2 லட்சம் பேர் பெண்கள்.
தீபாவளி பண்டிகை மட்டுமல்லாமல் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் விழாக்கள், கொண்டாட்டங்களுக்கும் பட்டாசு தேவைப்படுவதால் ஆண்டு முழுவதும் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கப்படுகின்றன. பட்டாசு தயாரிப்பதற்கென்று தொழில் உரிமம் பெற்றுள்ள பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் மாவட்ட வருவாய் அதிகாரியின் அனுமதியைப் பெற்ற மிகச்சிறிய அளவில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்கூடங்களும் இயங்குகின்றன. எந்த அளவுக்கு அந்த மாவட்ட மக்களுக்கு பட்டாசு தொழில் வாழ்வாதாரம் தருகிறதோ? அந்த அளவுக்கு வாழ்க்கையையும் பறித்துவிடுகிறது. பல நேரங்களில் காயத்தை விளைவிக்கும் சிறு விபத்துகள் நடந்தாலும், சில நேரங்களில் நடக்கும் பெரிய விபத்துகள் உயிர்களை கொத்து கொத்தாக பறித்துக்கொண்டு போய் விடுகின்றன.
நேற்று முன்தினம் விருதுநகர் தாலுகாவில் உள்ள கட்டனார்பட்டியில் இயங்கி வந்த ஒரு சிறிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து 21 பெண்கள் உள்பட 25 விலை மதிக்க முடியாத உயிர்களை பலி வாங்கிவிட்டது. தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகளின் வெற்றி கொண்டாட்டங்களுக்காக 'சரவெடி'க்கு அதிக ஆர்டர்கள் வந்துள்ளன. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, ஆலைகள் விதிமுறைப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கவேண்டிய நிலையிலும், ரகசியமாக வேலைகளைத் தொடர்ந்துள்ளன. கட்டனார்பட்டி விபத்திலும் இந்த விதிமீறல் அரங்கேறி இருக்கிறது. இதுதவிர பட்டாசுகள் தயாரிக்க தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான சல்பர், மேற்காசிய போரினால் தட்டுப்பாடு இருப்பதால் அதற்கு மாற்றாக குளோரைடு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிகிறது. இதுதான் அதிக உயிர்ப்பலிகள் ஏற்படுவதற்கும் காரணமாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் விபத்து நடந்த இந்த ஆலையில் 100 சதுர அடி உள்ள ஒரு அறையில் 4 பேர் என்ற வகையில், அங்குள்ள 4 அறைகளில் மொத்தம் 16 பேர் தான் பணியாற்றவேண்டும். ஆனால் அங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து இருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற சிறிய ஆலைகளில் மத்தாப்பு மற்றும் சோல்சா வெடிகள் மட்டுமே தயாரிக்க அனுமதி இருக்கிறது. ஆனால் விதிகளை மீறி இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விதி மீறல்களை கண்காணித்து தடுக்கவேண்டிய அதிகாரிகளின் கவனக்குறைவால் மட்டுமே இந்த விபத்து நடந்து இருப்பதாக தெரிகிறது. எனவே அரசு விதிகளை வகுத்தால் மட்டும் போதாது. அது முறையாக செயலில் உள்ளதா? கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறதா? என்று கண்காணிப்பதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். சல்பர் தட்டுப்பாட்டை தீர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.