

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்று இருப்பதுபோல, அமெரிக்காவிலும் காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என்று இரு அவைகள் இருக்கின்றன. செனட் சபையில் 100 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்களும் உள்ளனர். செனட் சபைக்கு அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் இருந்து தலா 2 பேர் என்ற விகிதத்தில் 100 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். என்றாலும், சுழற்சி முறையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செனட் சபையில் உள்ள மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பிரதிநிதிகள் சபையில் உள்ள உறுப்பினர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் வெறும் 2 ஆண்டுகள்தான்.
அந்தவகையில், கடந்த 3-ந்தேதி செனட் சபையின் 35 உறுப்பினர்களுக்கும், பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடந்தது. இதுமட்டுமல்லாமல், 36 மாநிலங்களின் கவர்னர்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் என்பார்கள். இதன் முடிவை அமெரிக்க மக்களைவிட உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. டிரம்பின் குடியரசுக் கட்சி வெற்றி பெறுமா? அல்லது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றி பெறுமா? என்பதில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. ஏனெனில், அமெரிக்காவில் சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதி கொண்டுவரும் எந்தத் திட்டமும் இரு அவைகளின் ஒப்புதல் இருந்தால்தான் நிறைவேற்றமுடியும். இதுவரை இரு அவைகளிலும் அவருடைய கட்சி பெரும்பான்மை பெற்றிருந்ததால்தான், அவர் நினைத்ததுபோல எந்த நாட்டுக்கும் அபராதம் வரி விதிக்க முடிந்தது. நான் வைத்ததுதான் சட்டம் என்று எல்லோரையும் மிரட்டவும் முடிந்தது.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, டிரம்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக இந்தியர்களை பாதிக்கும் விசா விவகாரம், அபராத வரி போன்றவற்றுக்கு பலத்த எதிர்ப்புகளை தெரிவித்தாலும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சிக்கு போதிய பலம் இல்லாததால் எதையும் தடுக்கவோ, ரத்து செய்யவோ முடியவில்லை.
இந்தநிலையில், அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியினரும் இந்த இரு கட்சிகளில் பல்வேறு முக்கிய பதவிகளுக்கும், மாநில கவர்னர் பதவிகளுக்கும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை மற்றும் மாநில கவர்னர் பதவிகளிலும் டிரம்பின் குடியரசுக் கட்சியைவிட, ஜனநாயகக் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அமெரிக்க தேர்தல் வரலாற்றில் செனட் மற்றும்
பிரதிநிதிகள் சபைகளை எதிர்க்கட்சி முழுமையாக கைப்பற்றுவது இது 6-வது தடவையாகும்.
இதுவரை நடந்த இடைக்காலத் தேர்தல்களில் பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் கட்சி இப்படி வீழ்ச்சி அடைந்ததில்லை. உலகின் பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க், அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக சுமார் ரூ.4,736 கோடிக்கு மேல் வாரியிறைத்தும் பலனளிக்கவில்லை. பிரமிளா ஜெயபால் உள்பட இந்திய வம்சாவளியினர் அதிகமானோர் வாகை சூடியிருக்கிறார்கள். இந்த தேர்தல் தோல்விக்கு ஈரான் போர்தான் காரணம் என்று டிரம்ப் கூறுகிறார். வழக்கம்போல, என்னிடம் வீட்டோ அதிகாரம் இருக்கிறது என்று ஒருபக்கம் மிரட்டினாலும், கழுகு பார்வையில் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு இருக்கிறது. "தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து நாட்டுக்காக பணியாற்றுவேன்" என்று டிரம்ப் நேரடியாக சொன்னாலும், அமெரிக்கா இனி இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் வெகுதூரம் போகமுடியாது.