

தமிழகத்தின், அதாவது மதராஸ் மாகாணத்தின் முதல் சட்டசபை தேர்தல் 1920-ம் ஆண்டு நடந்தது. அதில் மொத்தம் உள்ள 98 இடங்களில் திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தொடர்ந்து பல தேர்தல்கள் நடந்தன.அந்த வரிசையில் இன்று தமிழகத்தில் நடைபெறுவது 17-வது சட்டசபைக்கான தேர்தலாகும். ஜனநாயகத்தின் வலிமையே மக்கள் வாக்களித்து தங்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ள கட்சியை தேர்ந்தெடுப்பதுதான். வாக்களிப்பது மக்களுக்கு கிடைத்துள்ள ஜனநாயக உரிமை மட்டுமல்ல, அவர்களின் ஜனநாயக கடமையும் ஆகும். நம்முடைய ஒரு ஒட்டு என்ன மாற்றத்தை கொண்டுவரப்போகிறது என்று கருதி வாக்குச்சாவடிக்கு போக சோம்பல்பட்டு வீட்டில் முடங்கிவிடக்கூடாது.
ஏனெனில் 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இளையான்குடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் எஸ்.சிவசாமி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. ஆக நாம் போடும் ஒவ்வொரு ஓட்டும் பல மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும். இந்த தேர்தலில் ஓட்டுப்போட வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும். வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் ஆதார் உள்பட 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். 4,023 வேட்பாளர்களில் 234 பேரை தேர்ந்தெடுக்க 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் தகுதி படைத்த வாக்காளர்களாக உள்ளனர். மொத்த வாக்காளர்களில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். இதுமட்டுமல்லாமல் 18 வயது பூர்த்தி அடைந்த முதல் முறையாக வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட போகிறவர்கள் 14 லட்சத்து 59 ஆயிரத்து 39 பேர். இதுபோல 20 முதல் 29 வயதுவரை ஒரு கோடியே 7 லட்சத்து 18 ஆயிரத்து 457 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். ஆக இந்த இளைஞர் பட்டாளம் மட்டுமே மொத்த வாக்காளர்களில் 21.24 சதவீதமாகும்.
இதுபோல பெண்களின் எண்ணிக்கை 51.10 சதவீதம். ஆக இளைஞர் சமுதாயமும், பெண்களும் அளிக்கப்போகும் வாக்குகள் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக விளங்கும். இந்த தேர்தலின் சிறப்பு என்னவென்றால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஏராளமானவர்கள் தங்களின் ஜனநாயக பங்களிப்பை நல்க சொந்த ஊருக்கு வந்திருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவு செய்திருப்பது ஜனநாயகத்தின் மீதான அவர்களின் பற்றைக் காட்டுகிறது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒரு விமானத்தில் பைலட் பிரதீப், 'உங்களில் எத்தனை பேர் தேர்தலில் வாக்களிக்க செல்கிறீர்கள்? என்று கேட்டபோது பெரும்பாலான பயணிகள் கைகளை உயர்த்தியது. இதுதான் தமிழ்நாடு என்று பெருமை கொள்ள வைக்கிறது.
கடந்த தேர்தலில் 72.81 சதவீதம் பேர் வாக்களித்தனர். இப்போது வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த பணிகள் மூலம் இறந்தவர்கள் பெயர்களும், இரட்டை பதிவு உள்ளவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதால் இந்த முறை முன்பு இருந்ததைவிட அதிக வாக்குப்பதிவு இருக்கும் என்றும், பொதுமக்களின் ஆர்வமும் இதற்கு துணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் யாரை, எந்த கட்சியை தேர்ந்தெடுத்தால் நம் தொகுதி சிறக்கும்?, தமிழ்நாடு வளர்ச்சி பெறும்? என்று மனது என்ற தராசில் எடை போட்டு வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள பொத்தானை அழுத்த கிடைத்துள்ள வாய்ப்பை தவற விடக்கூடாது.