பட்ஜெட்டால் மக்களுக்கு என்ன பலன்?

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது.
பட்ஜெட்டால் மக்களுக்கு என்ன பலன்?
Published on

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது ஒரு சிறப்பாகும். மேலும் இதுவரை பட்ஜெட் தயாரிப்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நார்த் பிளாக் கட்டிடத்தில் நடந்தது. ஆனால் முதல் முறையாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகே மத்திய அரசால் கட்டப்பட்ட கத்தவியா பவன் அதாவது கடமைகள் மாளிகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் 9-வது தொடர்ச்சியான பட்ஜெட் என்ற வகையில் இது புதிய சாதனையாகும். இளைஞர்களின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்டது என்பதால், இது இளைஞர்களின் சக்தியால் உருவாக்கப்பட்ட பட்ஜெட் என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் 3 கடமைகளின் அடிப்படையில் அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகமாக முன்னேற்றுவது, மக்களின் ஆசைகளை நிறைவேற்றி இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் அவர்களையும் பங்குதாரர்களாக இணைத்துக்கொள்வது, அனைவரும் சேர்ந்து அனைவருக்கும் வளர்ச்சி என்ற நோக்கத்துடன் சமமாக வழங்குவது என்ற அடிப்படையிலேயே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தனது உரையில் கூறினார்.

பட்ஜெட்டின் மொத்த அளவு ரூ.53.47 லட்சம் கோடி என்றும், அரசின் வருவாய் அதில் ரூ.44.04 லட்சம் கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.16.96 லட்சம் கோடியை கடனாக பெற திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களை பொறுத்த அளவில் இந்த பட்ஜெட்டில் தனக்கு என்ன பயன் கிடைக்கும்? என் மாநிலத்துக்கு என்ன பயன் கிடைக்கும்? என்பதுதான் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால் அது நிறைவேறியதா? என்பது விமர்சனமாக இருக்கிறது. தனிநபர் வருமான வரியில் எந்த சலுகையும் இல்லை. கச்சா எண்ணெய் விலை சரிந்துவிட்டாலும் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த குறைப்பும் இல்லை. ஆனால் அதேவேளையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது.

விண்ணை தொட்டுக்கொண்டு இருக்கும் தங்கம் விலையை கட்டுப்படுத்த புதிய அறிவிப்புகள் வரும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் 16-வது நிதிக்குழுவில் மாநில அரசின் பங்கு 50 சதவீதமாக இருக்கவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் பட்ஜெட்டில் இந்த தொகை முன்பு இருந்ததுபோல 41 சதவீதம்தான் என்றும், இது 2031 வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்துக்கு வரிப்பகிர்வு விகிதம் 4.19 சதவீதத்தில் இருந்து 4.10 ஆக குறைந்திருக்கிறது. இது வெறும் 0.09 சதவீதம்தான் குறைவு என்றாலும் அது கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டுக்கு 2 அதிவிரைவு ரெயில்கள், அரிய கனிமவள வழித்தடம், ஆதிச்சநல்லூர் பண்பாட்டு சுற்றுலா மையம், பழவேற்காடு ஏரியில் பறவைகளை கண்காணிக்க பிரத்யேக தடங்கள், பொதிகை மலையில் மலையேற்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதுபோன்ற அறிவிப்புகள் இருக்கிறதே தவிர தமிழ்நாட்டின் நீண்டகால கோரிக்கைகளான மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்கள் உள்பட புதிய திட்டங்கள் எதுவுமில்லை. உற்பத்தி மற்றும் சேவை பிரிவுகள், ஜவுளி மற்றும் சிறிய, நடுத்தர தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதாலும் மூலதன செலவுகளுக்காக அதிகநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாலும் வேலைவாய்ப்பு பெருகும். மொத்தத்தில் மகிழ்ச்சியும் இருக்கிறது, ஏமாற்றமும் இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com