இந்திய பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது?

இந்தியாவின் வேலைவாய்ப்பில் பெரும்பகுதி விவசாயம், கட்டுமான தொழிலில்தான் இருக்கிறது.
இந்திய பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது?
Published on

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும்போது, மிகுந்த தொலைநோக்கு பார்வையோடு 2047-ம் ஆண்டு இந்தியா சுதந்திரதின நூற்றாண்டு கொண்டாடும்போது என்னுடைய நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என்று பெருமையோடு கூறினார். பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரண்ட் லைன் ஆசிரியர் வைஷ்ணா ராய் இதுபற்றி கருத்து தெரிவிக்கும்போது, வளமான இந்தியாவுக்கு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்று அழைக்கப்படும் ஜி.டி.பி. வளர்ச்சி மட்டும் போதாது. அதற்கு மேலும் தேவை. ஒரு நாடு சூப்பர் பவர் என்பது ஜி.டி.பி. எண்களை மட்டும் அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்படுவதில்லை. உயர்தர கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் அடிப்படை மிகவும் முக்கியமான தேவையாகும்.

நிர்வாக திறனும், நீதி பொறுப்பும் அவசியமாகும். சமத்துவமும், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் மிகவும் இன்றியமையாததாகும். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் முதலீடு செய்யாவிட்டால் 2047 கனவு என்பது வெறும் முழக்கமாகத்தான் இருக்கும் என்று சொன்னது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பலரை சிந்திக்கவும் வைத்துவிட்டது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி இப்போது 7.8 சதவீதம் என்று சில புள்ளியியல் ஏஜென்சிகளால் கூறப்படுகிறது. ஆனால் வேறு சில வித்தியாசமான அளவீடுகளை பயன்படுத்தி பார்த்தால் இது 4.5 சதவீதம் தான் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பொதுவாக ஜி.டி.பி.யை நாட்டு மக்கள் ஈட்டும் வருவாயை வைத்து கணக்கிடுகின்றனர். அல்லது அவர்கள் உற்பத்தி செய்யும் சரக்கு மற்றும் சேவைகளுக்காக ஆகும் செலவை வைத்து கணக்கிடுகிறார்கள். இவை இரண்டுமே சமமாக இருந்தால்தான் சரியான ஜி.டி.பி. யாக இருக்கும்.

ஆனால் இந்தியாவில் இவை இரண்டும் சமமாக இல்லாததால்தான் இப்போது வித்தியாசமான அளவீடுகளில் ஜி.டி.பி. கூறப்படுகிறது. அமெரிக்க ஜி.டி.பி.யின் அளவே கடந்த காலாண்டில் 3.3 சதவீதம் தான். கடந்த பல ஆண்டுகளாகவே பொது நிர்வாகம், கட்டுமான தொழில், நிதி சேவைகள்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது. 15 வயது முதல் 64 வயதுள்ளவர்கள் தான் வேலைபார்க்கும் வயதில் உள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஒரு கோடியே 10 லட்சம் என உயர்ந்துகொண்டே போகிறது. இது பெல்ஜியம் நாட்டின் மொத்த மக்கள் தொகை ஆகும். அந்தவகையில், ஒரு பெல்ஜியம் நாடு ஆண்டுதோறும் உருவாகிறது. எனவே அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 85 லட்சம் முதல் 90 லட்சம் வரை கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.

இப்போது இந்தியாவின் வேலைவாய்ப்பில் பெரும்பகுதி விவசாயம், கட்டுமான தொழிலில்தான் இருக்கிறது. இந்த நிலை மாறி உற்பத்தித்துறையில் இன்னும் வேகமான வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்புத்துறை வளரவேண்டும் என்றால் தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும். பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அதிக அளவில் இருக்க வேண்டும். அந்நிய நேரடி முதலீடு, தனியார் பங்களிப்பு, தரமான கல்வியோடு விலைவாசியும் குறையவேண்டும். எடுத்துக்காட்டாக சீனாவை விட இந்தியாவில் பெட்ரோல் விலை 30 சதவீதமும், டீசல் விலை 10 சதவீதமும், தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் 25 சதவீதமும் அதிகமாக இருப்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இதுமட்டுமல்லாமல் இப்போது முதல் இந்தியாவின் வளர்ச்சி ஆண்டுதோறும் 12 சதவீதமாக இருந்தால் தான் 2047 இலக்கு நிறைவேறும். 2047 கனவு இதெல்லாம் நடந்தால் தான் சாத்தியமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com