விவசாயிகளின் வருமானம் இருமடங்காவது எப்போது?

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜ.க. அரசு அமைந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த 8 ஆண்டில் அரசு மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.
விவசாயிகளின் வருமானம் இருமடங்காவது எப்போது?
Published on

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பா.ஜ.க. அரசு அமைந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த 8 ஆண்டில் அரசு மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. 8 ஆண்டுகளானதைத் தொடர்ந்து இமாசலபிரதேச தலைநகர் சிம்லாவில் நடந்த ஏழைகள் நல மாநாட்டில், பிரதமர் ஆற்றிய உரை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருந்தது.

"130 கோடி இந்தியர்களை கொண்ட இந்த குடும்பம்தான் என்னுடையது. நான் பிரதமர் இல்லை. ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் உறுப்பினர். அரசாங்கம் பிறப்பிக்கும் அரசாணையில் கையெழுத்து போடும்போது மட்டும்தான் பிரதமராக செயல்படுவேன். அதை அமல்படுத்தும்போது, இந்திய குடும்ப உறுப்பினராக மாறிவிடுவேன்" என்று பேசினார்.

மேலும், விவசாயிகளுக்கு தனது அரசாங்கம் செய்த நன்மைகளை பட்டியலிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, "அனைத்து திட்டங்களின் பயன்களும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் சென்றடைவதை உறுதி செய்ய நாடு உறுதிபூண்டுள்ளது" என்று கூறியிருப்பது, விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

2019-ம் ஆண்டு அவர் பிரதமரின் வேளாண் திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில் வழங்கப்படுகிறது. 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தின் பலனை பெற்று வருகிறார்கள். 8-ம் ஆண்டு நிறைவு நாள் அன்று மேலும் ஒரு தவணை அனைவருடைய வங்கிக்கணக்கிலும் செலுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு பல நல்ல திட்டங்களை மோடி அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால், 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி, நாட்டிலுள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஒரு உறுதிமொழியை அளித்தார். "2022-ம் ஆண்டில் வருமானம் இரு மடங்காக உயரும்" என்று அவர் அளித்த உறுதிமொழியை, மிக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட விவசாயிகள், அந்த நல்ல நாள் எப்போது வரும்? என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2013-2014-ம் ஆண்டு பட்ஜெட்டில், விவசாயத்துக்கு என்று ஒதுக்கிய தொகை ரூ.21,933.50 கோடிதான். இந்த தொகை 2021-2022-ம் ஆண்டில் 5.5 மடங்காக உயர்ந்து, ரூ.1,23,017.57 கோடியானது நிச்சயம் பாராட்டுக்குரியது. உணவு உற்பத்தி உயர்ந்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதாரவிலை உயர்ந்திருக்கிறது. ஆனால், விவசாயிகளின் வருமானம் இன்னும் இருமடங்காகவில்லை.

அதேநேரத்தில், சாகுபடி செலவு இருமடங்காக உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் எங்கள் வருமானம் இல்லை. விவசாய வருமானத்தை மட்டும் நம்பியிருந்தால், எங்கள் வாழ்க்கை செலவை ஈடுகட்டமுடியாது என்ற வகையில், மற்ற வகைகளிலும், குறிப்பாக ஆடு, மாடு வளர்த்தல் உள்பட எங்கள் விவசாய பணிகளோடு வேறு வேலைகளையும் பார்த்தல் போன்ற மற்ற வருமானங்களையும் சேர்த்தால்தான் எங்கள் வாழ்க்கையை ஓட்ட முடிகிறது. மேலும், அரசு நிறைய திட்டங்களை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த திட்டத்தின் பயனை எல்லோரும் அடையவில்லை. அதற்கேற்ற விழிப்புணர்வு இல்லை என்பதுதான் விவசாயிகளின் உணர்வாக இருக்கிறது.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான், பிரதமரின் வேளாண் திட்டத்தின் கீழ் 11 கோடி பேர் மட்டுமே பயனடைகிறார்கள். சிறப்பு வேளாண் கடன் அட்டை திட்டம் மூலம் 3.13 கோடி விவசாயிகள்தான் பயன்பெறுகிறார்கள். பிரதமரின் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் திட்டத்தின் கீழ், 60 வயதை அடைந்த அத்தகைய பிரிவில் வரும் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் திட்டமெல்லாம் இன்னும் கிராமப்புற விவசாயிகளுக்கு தெரியாமல் இருக்கிறது.

எனவே, அரசு திட்டங்களின் விவரங்கள் மற்றும் அதை பெறுவதற்கான வழிவகைகளை குக்கிராமங்களிலுள்ள விவசாயிக்கும் தெரியும் வகையில், மத்திய-மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள்ளோ, அல்லது அடுத்த ஆண்டுக்குள்ளோ விவசாயிகளின் வருமானம் இருமடங்காகிவிட்டது என்பதை பெருமையோடு அரசு சொல்லவேண்டும். அந்த இலக்கை நோக்கி அரசின் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கவேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com