எங்கே போகிறது இந்த சமுதாயம்..?

சாதி, மத வேற்றுமைகள் மாணவர்களிடம் இல்லாமல் அனைவரும் ஒன்றே என்ற உணர்வை ஊட்டவேண்டும்.
எங்கே போகிறது இந்த சமுதாயம்..?
Published on

அய்யன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளில் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறளாக, “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்று கூறியிருந்தார். இந்த குறளுக்கு பொருளாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலில் ஒழுக்கம்தான் மேன்மை தருமன்றி உயிரன்று; அதனால் உயிரினும் மேலாக ஒழுக்கத்தையே பாதுகாக்கவேண்டும் என்று தந்திருக்கிறார்.

ஆனால் உயிரினும் மேலான ஒழுக்கப்பாதையில் இருந்து இன்றைய இளைஞர் சமுதாயமும், மாணவர் சமுதாயமும் விலகிச் சென்றுக்கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது.

கடந்த 20-ந்தேதி தினத்தந்தியில் நெல்லை அருகே பரபரப்பு, புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, 10-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் அதிரடி கைது என்று தலைப்பிட்டு வந்த செய்தி இந்த சமுதாயம் எங்கே போகிறது? என்று கவலையின் உச்சத்துக்கே இழுத்துச்சென்றிருக்கிறது. நெல்லை, சங்கரன்கோவில் ரோட்டில் மானூர் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புறக்காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 3 மாணவர்கள் விதிமுறையை மீறி ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவிங் லைசன்சு மற்றும் ஆவணங்களை காட்ட சொல்லியிருக்கிறார்கள். பின்னர் மோட்டார் சைக்கிளின் சாவியை போலீசார் எடுத்துக்கொண்டு, பெற்றோரை அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள் என்று மாணவர்களிடம் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் அந்த 3 மாணவர்களும் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். வீட்டுக்கு சென்ற மாணவர்கள் பெட்ரோல் குண்டுகளை தயார் செய்து, நள்ளிரவில் அந்த புறக்காவல் நிலையத்தின் மீது வீசி தகர்த்திருக்கிறார்கள். அதில் ஒரு மாணவன் மது அருந்தியிருக்கிறான். இப்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வந்துள்ள நிலையில், அந்த 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் மேல் படிப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் மாணவர்களிடையே அடிக்கடி சாதி மோதல்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்துவருகிறது.

இதுபோல மாணவிகள் ஒன்றாக உட்கார்ந்து மது குடிக்கும் காட்சிகளும் வைரலாகி எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியிருக்கிறது. ஆக மாணவர்களுக்கு படிப்போடு ஒழுக்கத்தை கற்பித்து மாண்புமிகு மாணவன் ஆக்குவதற்கான தீவிர முயற்சிகளை எடுக்கவேண்டிய கட்டாயம் புதிய அரசுக்கு இருக்கிறது. பழைய காலங்களில் இருந்ததுபோல பள்ளிகளில் நல்லொழுக்கங்களை கற்பிக்கும் நீதி போதனை வகுப்புகளை நடத்தவேண்டும். இதனை அன்றாடம் கேட்பதால் மாணவர்களின் உள்ளம், விளைச்சலை பெருக்கி தரும் நல்ல நிலம்போல பண்படும்.

பள்ளிகளில் மன நல ஆலோசகர்களை நியமித்து, மாணவர்களிடம் தீய பழக்கங்கள் உருவாகும் முன்பே அழித்துவிடவேண்டும். சாதி, மத வேற்றுமைகள் மாணவர்களிடம் இல்லாமல் அனைவரும் ஒன்றே என்ற உணர்வை ஊட்டவேண்டும். சாதி பாகுபாடு என்பது வியாதி போன்றது. அதற்கு சமத்துவம் என்ற மருந்தை ஆரம்பத்திலேயே கொடுத்து குணப்படுத்தவேண்டும்.

மதுப்பழக்கம், வன்முறை உணர்வு என பிள்ளைகள் தடம் மாறும்போது அவர்களுக்கு புத்திமதி சொல்லி நல்வழிப்படுத்தவேண்டிய முழு பொறுப்பும் பெற்றோருக்குத்தான் இருக்கிறது. பிள்ளைகளும் அதனை உணர்ந்து செயல்படவேண்டும். இளம் வயதில் நல்ல பழக்கங்களையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை கருத்தில்கொண்டு மாணவர்களும் தங்களுக்கான பாதையை வகுக்கவேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com