தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை !

கடந்த 21-6-2021 அன்று சட்டசபையில் கவர்னர் உரையின்போது, “தமிழ்நாட்டின் நிதி நிலைமையை விவரிக்கும் வெள்ளை அறிக்கை பொது வெளியில் வெளியிடப்படும்” என்று தமிழக அரசு தெரிவித்தது.
தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை !
Published on

கடந்த 21-6-2021 அன்று சட்டசபையில் கவர்னர் உரையின்போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமையை விவரிக்கும் வெள்ளை அறிக்கை பொது வெளியில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. சொன்னதை நிறைவேற்றும் வகையில், நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இது, தமிழகத்தின் தற்பேதைய நிதி நிலைமையை வெளிக்காட்டும் காலக் கண்ணாடிபோல இருக்கிறது.

தமிழ்நாட்டின் நிதிநிலைமை 2013-2014-ம் ஆண்டுக்கு பிறகு மேசமடைய தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வருமானம் பெருமளவில் குறைந்து வந்ததையும் எடுத்துக்காட்டியுள்ளார். 31-3-2021 நிலவரப்படி, தமிழகத்தின் மொத்த பொதுக்கடன் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடி என்றும், மின்வாரியம் மற்றும் அரசு போக்குவரத்து கழகங்களின் ஒட்டுமொத்த கடன் ரூ.2 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் பெற்றுள்ள கடனுக்காக தினசரி செலுத்தும் வட்டித்தொகை ரூ.115 கோடி என்றும், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர பொறுப்புகள் உள்பட தினமும் செலுத்தும் வட்டித்தொகை ரூ.180 கோடி என்றும், ஒவ்வொருவரும் ஒரு ஆண்டுக்கு செலுத்தும் வட்டித்தொகை (பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட) ரூ.7,700 என்றும், ஒவ்வொருவர் மீது மொத்த கடன் தொகை ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் என்றும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்த நேரத்தில், அவர் சில விஷயங்களை, அதாவது நிதர்சனமான உண்மைகளை மிக வெளிப்படையாக தெரிவித்தது பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டின் தேவையற்ற மானியங்கள் அதிகரித்துவிட்டன. தமிழக அரசு சமீபத்தில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் வழங்கிய ரூ.4 ஆயிரம் உதவித்தொகை உள்பட பல மானியங்கள் தேவையற்றவர்கள், அதாவது வருமான வரி செலுத்தும் பணக்காரர்களுக்குகூட வழங்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதற்கு காரணம் தமிழக அரசிடம் மக்களின் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் இல்லாததுதான். அத்தகைய தகவல்கள் திரட்டப்படவேண்டும் என்ற ஒரு நல்ல வரவேற்கத்தக்க கருத்தை கூறியிருக்கிறார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மானியங்கள் கண்டிப்பாக தேவை. அதே நேரத்தில், தேவையற்றவர்களுக்கு இலவசங்கள், மானியங்கள் போய் சேர்வது நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டும். அடுத்து, வெறுமனே வரியில்லா பட்ஜெட் என்று சொல்லி, மக்களின் தலையில் கடன் சுமையை ஏற்றுவதை தவிர்த்து, மக்களின் தலையில் வீண் கடன் சுமையை ஏற்றுவது சரியான ஒரு பொருளாதாரம் அல்ல என்று தெரிவித்துள்ளார். வரியில்லா பட்ஜெட் என்பது அர்த்தமற்ற வாதம். சரியான வரியை சரியான நபரிடம் இருந்து சரியான அளவு வசூலித்து, அதை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிப்பாதையை உருவாக்குவதற்கும் செலவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.

15 ஆண்டுகளாக வாகன வரி மாற்றியமைக்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் எல்லாம் பெரும் நஷ்டத்தில் இயங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, இதற்கெல்லாம் வரப்போகும் 13-ந்தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புதிய வரிகள் அறிவிக்கப்படுமா?, இல்லையென்றால் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா? என்பது தெரியவில்லை. ஆனால், நிதிநிலையை காரணம்காட்டி, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை மாற்றியமைக்கவோ, அல்லது கைவிடவோ நிச்சயமாக எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படாது என்ற உறுதியை அளித்தது மிகவும் வரவேற்கத்தக்கது. நிதிநிலையை தெரிவித்துவிட்டார். இனி இந்தப்பள்ளத்தில் இருந்து தமிழகத்தை கைதூக்கிவிடும் முயற்சியாக என்னென்ன சீர்திருத்தங்களை அறிவிக்கப்போகிறார்? என்பது நிச்சயமாக 13-ந்தேதி பட்ஜெட்டில் எதிரொலிக்கும் என்பது மட்டும் உறுதியான எதிர்பார்ப்பாக உள்ளது. அரசியல் துணிச்சலோடு, நிர்வாகத் திறனோடு, பல சீர்திருத்த நடவடிக்கைகளை பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com