பிபா கோப்பையை ஏந்தப்போவது யார்?

23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
பிபா கோப்பையை ஏந்தப்போவது யார்?
Published on

உலகத்தில் இப்போது எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும், அதையெல்லாம் ஒருபக்கம் பார்த்துக்கொண்டு மறுபக்கம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எந்த நாட்டு அணி வெற்றி பெறப்போகிறது? யார் அதிக கோல் போடப்போகிறார்கள்? தங்கள் மனதை கவரப்போகும் இளம் ஆட்டக்காரர் யார்? என்பதையே இப்போது விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த 11-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 19-ந்தேதி வரை நடைபெறும் இந்த 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அந்த 3 நாடுகளிலும் உள்ள 10 நகரங்களில் மொத்தம் 104 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த போட்டிகளில் ஆடுவதற்கு மொத்தம் 1,248 வீரர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இதில் 891 வீரர்கள் இப்போதுதான் முதல் முறையாக உலகக் கோப்பையில் கால் பதிக்கிறார்கள். போட்டியில் பங்கேற்கும் பல வீரர்கள் மிகவும் குறைந்த வயதிலானவர்கள். நிறைய பேர் 20 வயதுக்கு உட்பட்ட பதின் பருவத்தினராகும். இதில் குறைந்த வயது வீரர் என்றால் அது மெக்சிகோ நாட்டு வீரரான கில்பர்ட் மோராதான். அவர் இப்போதுதான் 18 வயதை தொட்டிருக்கிறார். அதிக வயதான வீரர் யார்? என்றால் ஸ்காட்லாந்து கோல் கீப்பர் கிரேக் கோர்டன்தான். அவர் பிறந்து 43 ஆண்டுகள், 162 நாட்கள் ஆகிறது.

உலகில் 7 அதிசயங்கள் உண்டு. அதுபோல இந்த ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் திறமையான குறைந்த வயது அடிப்படையில் 7 இளம் வீரர்களை 'தினத்தந்தி' குழுமத்தில் இருந்து வெளிவரும் 'டிடிநெக்ஸ்ட்' ஆங்கில பத்திரிகை தேர்வுசெய்து பட்டியலிட்டுள்ளது. அந்த 7 வியப்பூட்டும் வீரர்களாக நார்வேயின் 21 வயது வீரர் ஆண்டனியோ நுசா, ஐவரி கோஸ்ட்டை சேர்ந்த 19 வயது யான் டியோமாண்டே, எகிப்தின் 18 வயது ஹம்சா அப்துல் கரீம், அர்ஜென்டினாவை சேர்ந்த 21 வயது நிகோ பாஸ், பிரேசிலின் 19 வயதான ரயான், செனகல்லை சேர்ந்த பாரா சபோகா என்டியாயே, மெக்சிகோவின் கில்பர்ட் மோரா ஆகியோர் இந்த போட்டியில் 7 நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள் என்று கூறியுள்ளது. இந்த 7 வீரர்களோடு, ஸ்பெயினை சேர்ந்த 18 வயது லாமில் யாமலும் இந்த போட்டிகளில் சுடர்விட்டு பிரகாசிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமல்ல மேலும் பல இளம் வீரர்கள் தங்கள் நாட்டு அணிக்காக மிக சிறப்பாக விளையாடி பெருமை சேர்த்து வருகிறார்கள். இவர்களை இரும்பு பரம்பரை என்று சொல்வதா? தங்க பரம்பரை என்று சொல்வதா? என்று விளையாட்டு உலகம் பாராட்டு மழை பொழிந்துகொண்டு இருக்கிறது.

கோப்பையை கையில் ஏந்தப்போவது பிரான்சா, ஸ்பெயினா, அர்ஜென்டினாவா, இங்கிலாந்தா, போர்ச்சுகலா என்று உலகம் முழுவதும் யூகத்தின் அடிப்படையில் பந்தயங்கள் நடைபெறுகின்றன.

இதுமட்டுமல்லாமல் அதிக கோல் போட்டவர் என்ற பெருமையை தட்டி செல்லப்போவது யார்? இதுவரை 13 கோல்கள் போட்டுள்ள மெஸ்சியா, இரு உலகக் கோப்பை தொடரில் மட்டும் கலந்துகொண்டு 12 கோல்கள் போட்டு சாதனை படைத்த எம்பாப்பேயா? என்று விளையாட்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com