

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடக்கும் போரால் வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. அதனால் அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 41 சதவீதம் அதிகரித்து 103 டாலராக இருக்கிறது. அதன் தாக்கத்தால் இந்தியாவில் சமையல் கியாஸ் சப்ளையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இந்தியன் ஆயில் நிறுவன பொது மேலாளர் வெற்றி செல்வகுமார். வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி அளித்திருந்தாலும், சிலிண்டர் பதிவு செய்வதற்கு 25 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதும், அதுவே கிராமப்புறங்களில் உள்ள இணைப்புகளுக்கு 45 நாட்கள் கழித்தும்தான் மறுபதிவு செய்ய முடியும் என்ற உத்தரவும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு பதிவு செய்தாலும் சிலிண்டர் கிடைப்பதற்கு மேலும் பல நாட்கள் ஆகும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது என்று மக்கள் சொல்கின்றனர். கிராமப்புற மக்களென்றால் கியாஸ் சிலிண்டர் அடுப்பை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? என்று மறுபுறம் கிராம மக்கள் ஆத்திரத்தோடு கேட்பது எல்லோருக்கும் கேட்கிறது. கிராமங்களில் மக்கள் விறகு அடுப்பை பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மத்திய அரசாங்கம் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச இணைப்பு வழங்கி, அதற்கு மானியம் ரூ.300-ம் வழங்குவதால் அவர்களையெல்லாம் விறகு அடுப்புகளை ஓரம் கட்டி விடச் செய்தார்கள்.
இந்த திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 62 சதவீதமாக இருந்தது. இப்போது அது 99 சதவீதமாகிவிட்டது. விறகு அடுப்பை பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களை கியாஸ் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்த பழக்கிவிட்டு, 45 நாட்களுக்கு பிறகுதான் புதிய 'சப்ளை' என்றால் அதற்கு முன்பு கியாஸ் சிலிண்டர் காலியாகிவிட்டால் மீண்டும் விறகு அடுப்புக்கு போவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஏனென்றால் சமையல் கட்டில் விறகு அடுப்பு இருந்த இடத்தை இடித்து விட்டுத்தான் சிலிண்டர் அடுப்புக்கான மேடை அமைத்திருக்கிறார்கள். இப்போது விறகு வைத்து சமையல் செய்ய வேண்டுமென்றால் அடுப்புக்கு எங்கே போவார்கள்?
இதுமட்டுமல்லாமல் வணிக ரீதியான வினியோகம் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டதால் 30 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டு விட்டன. டீக்கடைகள் மற்றும் சிறிய ஓட்டல்களில் விறகு அடுப்பை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் ஒருபக்கம் விறகு விலை உயர்ந்து விட்டது என்றாலும், மறுபக்கம் ஓட்டல்களில் விரும்பிய பண்டங்களை சாப்பிடவும் முடியவில்லை. உணவு பட்டியல்களும் குறைக்கப்பட்டு விட்டன. மத்திய அரசாங்கம் உள்நாட்டு கியாஸ் உற்பத்தியை 30 சதவீதம் அதிகரித்து விட்டது என்றாலும், அதன் பலன் வீட்டு பயன்பாட்டிலும் எதிரொலிக்கவில்லை. ஓட்டல்களுக்கும் வினியோகிக்கப்படவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களை விடுவதற்கு ஈரான் அரசு சம்மதித்துவிட்டது என்றாலும், அந்த பகுதியில் காத்துக்கொண்டிருக்கும் 22 கப்பல்களில், ஒரு கப்பலில் எல்.என்.ஜி., 6 கப்பல்களில் சமையல் கியாஸ் இருக்கிறது. 4 கப்பல்களில் கச்சா எண்ணெய் இருக்கிறது. அந்த கப்பல்கள் வந்தால்தான் நிலைமையை சற்று சீரமைக்க முடியுமே தவிர, சகஜ நிலை வரும் நிலை சமீபத்தில் இல்லை.