புதிய அரசு, தெரு நாய் தொல்லைக்கு முடிவு கட்டுமா?

தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களில் 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அரசு, தெரு நாய் தொல்லைக்கு முடிவு கட்டுமா?
Published on

நன்றியுள்ள ஜீவன் என்று அழைக்கப்படும் நாய்கள், நன்றி கெட்ட விலங்கு என சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டில் இப்போது அதன் தொல்லைகள் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. சாலையில் நடந்து போகவே முடியவில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை ஜென்ம விரோதிகளாக கருதி, விரட்டி விரட்டி கடிப்பதால் பல விபத்துகள் நடக்கின்றன.

நடைபயிற்சி செல்பவர்களும் நாய்களால் தினந்தோறும் இன்னல்களை சந்திக்கிறார்கள். பலர் கையில் கம்போடுதான் நடக்கிறார்கள். நாய்கள் ஆர்வலர்கள் பலர் நாய்களுக்கு உணவை பைகளில் கொண்டுவந்து ஆங்காங்கு போடுவதால், அவர்களை கண்டவுடன் மட்டும் வாலாட்டிக்கொண்டு பாய்ந்து செல்கின்றன.

ஆனால் எதிரே நடந்து செல்பவர்களை எதிரிபோல பாவித்து உறுமிக்கொண்டே செல்கின்றன. உறுமும் நாய்தான் கடிக்கும் என்பார்கள். அதனால்தான் நாய்களுக்கு உணவு அளிப்பவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்குங்கள் என்று பல கோரிக்கைகள் வந்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே தெரு நாய் தொல்லையால் ஏற்படும் துயரத்தை மக்கள் அபய குரலாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும் எந்த நிலையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. கோவில்பட்டியில் 4 நாய்கள் சேர்ந்து ஒரு சிறுமியை கடித்த கோரக்காட்சி தந்தி டி.வி.யில் சமீபத்தில் ஒளிபரப்பானது. இது பார்ப்போரின் நெஞ்சை பதற வைப்பதாக இருந்தது. இந்த ஆண்டு கடந்த 4 மாதங்களிலேயே தமிழ்நாட்டில் 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ரேபிஸ் நோயினால் மட்டும் 17 பேர் இறந்திருக்கிறார்கள்.

நாய்க்கடியால் வரும் உயிர்க்கொல்லியான ரேபிஸ் நோயைப் பொறுத்தமட்டில் தனி மருத்துவமோ, சிகிச்சையோ இல்லை. இந்த நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகிறார். மிகவும் சவாலான இந்த நோய்க்கு ஒரே தடுப்புதான் இருக்கிறது. அது அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடுவதுதான் என்றும் அவர் கூறுகிறார்.

இதை நடைமுறைக்கு கொண்டுவருவது மிகவும் சிரமம். ஆனால் மக்கள்தான் அதிக விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். எந்த நாய் கடித்தாலும் முதலில் கடிபட்ட இடத்தை நன்றாக கழுவவேண்டும். அதன்பிறகு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று, தொடர்ந்து இதற்கான ஊசியை அடுத்தடுத்து சீரான இடைவெளியில் போடவேண்டும். வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்து 10 நாட்கள் உயிரோடு இருந்தால் 3 ஊசிகள் போட்டால் போதும்.

தெரு நாய்களாக இருந்தால் கடித்தவுடன் ஒரு ஊசியும், அடுத்து 3-வது நாளிலும், 7-வது நாளிலும், 14-வது நாளிலும், 28-வது நாளிலும் என 5 தவணைகளாக ஊசிகள் கண்டிப்பாக போடவேண்டும். எனவே அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இந்த நாய்க்கடிக்கு ஊசி போதுமான அளவில் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இதுகுறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை முறையாக பின்பற்றினாலே போதும்.

இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக வெறிப்பிடித்த, ஆபத்தான, நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தெரு நாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண செயல் திட்டம் வகுப்பது த.வெ.க. அரசின் தலையாய கடமையாக இருக்கிறது. இந்த அரசாவது தெரு நாய் தொல்லைக்கு முடிவுரை எழுதுமா? என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com