

சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி. வினியோகத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் மீண்டும் புதிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது உள்பட பல காரணங்களை சொல்லி கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதன் காரணமாக ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் நீரிணையை மூடிவிட்டது. உலகில் உள்ள மொத்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 5-ல் ஒரு பகுதியும், கணிசமான அளவு எல்.பி.ஜி. வர்த்தகமும் ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் நடக்கிறது. இதை மூடியவுடன் இந்தியா உள்பட பல நாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. ஒரு வழியாக அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியதால் அனைத்து நாடுகளும் நிம்மதி பெருமூச்சுவிட்டன.
இனி எல்.பி.ஜி. வினியோகமும், கச்சா எண்ணெய் வினியோகமும் சீராகும் என்று இந்தியா உள்பட பல நாடுகள் எதிர்பார்த்தன. அதுபோலவே கப்பல்களும் ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்தன. ஆனால் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த ஈரான், கப்பல்கள் தங்கள் கடலோர வழியாகத்தான் செல்லவேண்டுமே தவிர, ஓமன் கடற்கரை வழியாக கடந்து செல்லக்கூடாது. அப்படி ஓமன் வழியாக கடந்து செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்ததுடன், 5 நாட்களில் ஓமன் கடற்கரை வழியாக சென்ற 2 கப்பல்களை தாக்கியது. மூன்றாவதாக ஓமன் கடற்கரை வழியாக சென்ற சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கன்டெய்னர்களை ஏற்றி சென்ற அந்த எம்.வி.ஜி., எப்.எஸ். கேலக்சி கப்பலில் 11 இந்திய மாலுமிகள் உள்பட 24 பேர் இருந்தனர்.
அவர்கள் கப்பலை நங்கூரம் பாய்ச்சிவிட்டு உயிர்காக்கும் படகுகள் மூலம் தப்பித்து வந்தனர். 10 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர். அவர்களில் 3 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் ஓமன் நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களும் அந்த நாட்டில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹெராம்ப் கர்மார்க்கர் என்ற என்ஜினீயரை மட்டும் காணவில்லை. இதற்கிடையே ஈரான் ஹார்முஸ் நீரிணையை தற்போது மூடிவிட்டது. இந்த நிலையில் ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற 2 அமீரக எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பலியானார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். இதனால் இந்தியாவுக்கு வரும் ஹைட்ரோ கார்பன் சப்ளை குறிப்பாக எல்.பி.ஜி., திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மட்டுல்லாமல், கச்சா எண்ணெய் வினியோக சங்கிலியிலும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துவிடுமோ? என்ற சந்தேகம் மக்களிடம் துளிர்விட்டிருக்கிறது.
இப்போதைக்கு நிலைமையை சமாளிக்க போதுமான அளவு இருப்பு இருந்தாலும் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டால் நிலைமை கஷ்டமாகிவிடும். இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை கப்பல்கள் கடக்க அமெரிக்க படைகள் பாதுகாப்பு வழங்கும். அதற்கு சுங்கக் கட்டணமாக 20 சதவீதம் வசூலிக்கப்படும் என்று தன்னிச்சையாக அறிவித்துள்ளார். ஈரான் கப்பல்களுக்கு தடை விதித்துள்ள சூழலில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கச்சா எண்ணெய், எல்.பி.ஜி.யை ரஷியா, அமெரிக்கா, தென்அமெரிக்க நாடுகளில் இருந்து வாங்கிக்கொள்ளலாம் என்றாலும், அங்கிருந்து கப்பல்கள் வருவதற்கு தாமதமாகும். செலவும் அதிகரிக்கும். எனவே ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டால்தான் இந்தியாவுக்கு விடிவுகாலம். இல்லையென்றால் பெட்ரோல்-டீசல், எல்.பி.ஜி. விலையும் உயரும், தட்டுப்பாடும் தலைதூக்கும் என்ற பயம் மக்களிடம் இருக்கிறது.