தெருநாய் தொல்லைக்கு இது முற்றுப்புள்ளி அமைக்குமா?

தெருநாய் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
தெருநாய் தொல்லைக்கு இது முற்றுப்புள்ளி அமைக்குமா?
Published on

இப்போதெல்லாம் சாலையிலேயே நடக்க முடியாத அளவுக்கு தெருநாய்த் தொல்லை அதிகமாகி கொண்டு இருக்கிறது. இந்த ஊர், அந்த ஊர் என்று இல்லாமல் சின்னஞ்சிறு கிராமங்கள் தொட்டு, பெருநகரங்கள் வரை அனைத்து ஊர்களிலும் தெருக்களில் நடப்பதற்கே பயமாக இருக்கிறது. அதிலும் காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி செல்பவர்களுக்கு அதில் கவனம் செலுத்த முடியாமல் தெருநாய் எப்போது மேலே விழுந்து கடிக்க வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் நாலாபுறமும் பார்த்துக் கொண்டே போகவேண்டிய நிலை இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களைப் பார்த்தால் இந்த தெருநாய்களுக்கு அப்படி ஒரு ஆக்ரோஷம் வந்து விடுகிறது. துரத்தி துரத்தி விரட்டுகிறது. சிறு குழந்தைகள் மீது தெருநாய்களுக்கு என்னதான் கோபமோ தெரியவில்லை அவர்களைக் கண்டாலே கடிக்க பாய்கிறது. பல முதியோர்கள் தெருநாய்களுக்கு பயந்து கொண்டு இப்போதெல்லாம் வெளியெ செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி விடுகின்றனர்.

மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், கடைவீதிகள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஏன்? பாதுகாப்பு அதிகம் உள்ள விமான நிலையங்களில்கூட தெருநாய்கள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகிறது. இதற்கு முடிவே இல்லையா? என்று மக்கள் அபயக் குரல் வெளியிட்டபோதும் அது அரசுகளின் கவனத்துக்கோ, உள்ளாட்சி அமைப்புகளின் கவனத்துக்கோ, அதிகாரிகளின் கவனத்துக்கோ ஏன் எட்டவில்லை என்று தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் ரேபிஸ் நோயால் 255 பேர் இறந்து இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி கலந்த செய்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கிடைத்துள்ளது.

எந்த பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு நீதிமன்றங்களில்தான் என்ற வகையில், இப்போது சுப்ரீம் கோர்ட்டு இதை கையில் எடுத்துள்ளது. தெருநாய்த் தொல்லைகள் சம்பந்தமாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப்மேத்தா, அஞ்சாரியா ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மிக கடுமையான கோபக்குரலை எழுப்பியுள்ளனர். அதில், கடந்த 5 ஆண்டுகளாக இந்த பிரச்சினை குறித்து மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் 9 வயது குழந்தையை தெருநாய் பாய்ந்து, பாய்ந்து கடித்திருக்கிறதே, அதற்கு யார் பொறுப்பு எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்? குழந்தைகளை மட்டுமல்லாமல், பெரியவர்களையும் நாய்கள் கடிப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. தெருநாய்களால் கடிபடுபவர்களுக்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு நாய்க்கடி மரணங்களுக்கும் மாநில அரசுகள் பெரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும். தெருநாய்களால் கடிபடும் சம்பவங்கள் நடக்குமிடங்களில் உணவு வழங்குபவர்களிடம் இருந்து கடும் அபராதம் வசூலிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும், உண்மையிலேயே தெருநாய் பிரியர்களுக்கு அன்பு இருந்தால் அவர்கள் அந்த நாய்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று வளர்க்கலாமே. தெருநாய்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்றால், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் உணவளிக்கட்டும். தெருக்களில் வந்து ஏன் உணவளிக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் நீதிமன்றம் சட்டபூர்வ விதியை செயல்படுத்தவே விரும்புகிறது. இந்த தெருநாய்களுக்காக குரல் எழுப்புபவர்கள் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து ஏன் குரல் எழுப்பவில்லை? என நீதிமன்றம் எழுப்பிய இந்த கண்டன கணைகள் அரசுகள் மட்டுமல்லாமல், தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் மற்றும் அதன் ஆர்வலர்கள் கவனத்துக்கும் செல்லவேண்டும். இதுகுறித்து அவர்களின் உடனடி நடவடிக்கையை சமுதாயம் எதிர்பார்க்கிறது. மொத்தத்தில் தெருநாய் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com