கொரோனா பரவலில் மோசமான காலம்

கடந்த மார்ச் மாதம் கால்தடம் பதித்த கொரோனா, எப்போது தமிழ்நாட்டைவிட்டு ஓடிச்செல்லும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
கொரோனா பரவலில் மோசமான காலம்
Published on

கடந்த மார்ச் மாதம் கால்தடம் பதித்த கொரோனா, எப்போது தமிழ்நாட்டைவிட்டு ஓடிச்செல்லும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கொரோனா ஒருபக்கம் இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது, பொருளாதாரம் தடைபடக்கூடாது என்றநிலையில், கடந்த 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்த 8-வது ஊரடங்கில் நிறைய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளை அறிவித்ததால், ஏதோ கொரோனா ஒழிந்துவிட்டது போன்ற மனநிலையில், மக்கள் கொஞ்சம்கூட எச்சரிக்கையோடு இல்லாமல், நடமாடும் நிலையை காணமுடிகிறது. கொரோனா குறைகிறது, நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்காமல், எப்போதுமே வெளிப்படையாக பேசுபவர், யதார்த்த நிலையை பட்டவர்த்தனமாக தெரிவிப்பவர் என்ற பெயருக்கு சொந்தக்காரரான தலைமைச் செயலாளர் கே.சண்முகம், மாவட்ட கலெக்டர்களுடன் அடிக்கடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட கலெக்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் தீவிரமான நிலையில்தான் இருக்கிறது. இந்த போரில் நீங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தளரவிட்டுவிடக்கூடாது. எந்த மட்டத்திலும் திருப்தி அடைந்துவிடக்கூடாது. செப்டம்பர் 1-ந்தேதி முதல் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மிக விழிப்போடு இருக்கவேண்டும். ஏனெனில், கொரோனா நிர்வாகத்தில் மோசமான காலம் வரப்போகிறது. தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், பொதுபோக்குவரத்து, வழிபாட்டு தலங்கள் போன்ற எல்லாமே திறக்கப்பட்டுள்ள நிலையில், சரியான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல், பொதுமக்கள் முககவசம் அணியாமல், பொது இடங்களில் சமூகஇடைவெளியை பின்பற்றாமல், தங்கள் சுகாதாரத்தை பேணிக்காக்காமல் இருந்தால் அக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்று மிக அதிகமாகிவிடும். எனவே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். பொதுமக்கள் மிக எச்சரிக்கையோடு இருக்கும் வகையில் அடிக்கடி கை கழுவுதல், முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூகஇடைவெளியை பின்பற்றுதல், அதிக கூட்டமுள்ள பகுதிக்கு செல்வதை தவிர்த்தல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல், வீட்டில் உள்ள குழந்தைகளையும், முதியோர்களையும், இணை நோய் உள்ளவர்களையும் மிகக்கவனமாக பார்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிர நடவடிக்கைகளை கலெக்டர்கள் மேற்கொள்ளவேண்டும். மக்கள் ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக சோதனை செய்யவேண்டும். தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும். அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். பணிபுரியும் இடங்களில் மதிய உணவு வேளையின்போதும், டீ குடிப்பதற்கான இடைவேளையின்போதும், பணியாளர்கள் தங்கும் இடத்தில் தேவையற்ற கூட்டம் கூடுவதையும் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தேவைப்பட்டால் நிறைய கட்டுப்பாட்டு பகுதிகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். சோதனைகள் தீவிரப்படுத்தப்படவேண்டும் என்பன போன்ற பல அறிவுரைகளை எழுதியுள்ளார்.

அறிவுரைகளை மட்டும் சொன்னால் நமது மக்கள் அதன்படி முழுமையாக பின்பற்றுவதில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அபராதம் விதித்துவிடுவார்கள் என்ற பயம் இருந்தால்தான் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவார்கள். அந்தவகையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம், சமூகஇடைவெளியைப் பின்பற்றாவிட்டால் ரூ.500 அபராதம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிக்கப்பட்ட வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் ரூ.500 அபராதம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் என்ற வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. தலைமைச் செயலாளர் சொன்னதுபோல, மோசமான காலம் வராமல் தடுக்கப்பட வேண்டுமென்றால், அரசு நிர்வாகம் தீவிரமாக செயல்படவேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். அவசர சட்டத்தை பிறப்பித்ததாலேயே பயனில்லை. பொதுமக்கள் எல்லோரும் முககவசம் அணிகிறார்கள். சமூகஇடைவெளியை பின்பற்றுகிறார்கள் என்ற நிலையை உருவாக்குவது பொதுமக்கள் கையிலும், இந்த அவசர சட்டத்தை நிறைவேற்றவேண்டிய பொறுப்பிலுள்ள போலீசார் உள்பட அரசு அதிகாரிகளின் கையிலும்தான் இருக்கிறது. மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமைச்செயலாளர் எழுதியுள்ள இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள், கடைக்கோடியில் உள்ள பொதுமக்கள் வரை நிச்சயம் சென்றடையவேண்டும். பொதுமக்கள் உரிய விழிப்புணர்வோடு இருந்தால்தான் கொரோனா பரவலை தடுக்கமுடியும். எனவே, உரியவகையில் பத்திரிகைகளிலும், டெலிவிஷன்களிலும் அரசு விளம்பரப்படுத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com