ஆர்வமுடன் வாக்களிக்க குவிந்த இளம் வயதினர்

தமிழகத்தில் நடந்த இந்த தேர்தலில் 85 சதவீதத்திலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
ஆர்வமுடன் வாக்களிக்க குவிந்த இளம் வயதினர்
Published on

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. எப்போதும்போல வன்முறை என்பது எங்கள் அகராதியிலேயே இல்லை என்பதை மீண்டும் இந்த தேர்தல் மூலம் தமிழ்நாடு உறுதிப்படுத்தியுள்ளது. எதிர், எதிர் துருவங்களாக இருந்தவர்கள்கூட வாக்குச்சாவடியில் சந்தித்தபோது பாசப்பறவைகள் போல பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு கை கொடுத்துக்கொண்டார்களே தவிர, எந்த சலசலப்புக்கும் இடம் தரவில்லை. எடுத்துக்காட்டாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் குடும்பத்தோடு வாக்களிக்க சென்றபோது அந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு வந்தார். உடனடியாக இருவரும் புன்முகத்தோடு பரஸ்பரம் வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்துக்கொண்டனர்.

இதுபோன்ற நிகழ்வுகள்தான், இதுதான் எங்கள் தமிழ்நாடு என்று பெருமை கொள்ள வைக்கிறது. இதுபோல மேற்கு வங்காளத்திலும் பெரிய அளவில் வன்முறைகள் எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றினர். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது மொத்த வாக்காளர்களான 6.29 கோடி பேரில் 4.58 கோடி வாக்காளர்கள் வாக்களித்து 72.73 சதவீதத்தை பதிவுசெய்தனர். இதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் சுமார் 40 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து இப்போது நடந்து முடிந்த தேர்தலில் 18 வயது பூர்த்தியான 14 லட்சத்து 60 ஆயிரம் பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இவ்வாறு பல பெயர்களை கூட்டி கழித்தப்பிறகு இந்த தேர்தலுக்கான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். இதில் இப்போது நடந்துள்ள தேர்தலில் 4.88 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 85.15 சதவீதமாகும். தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தலிலேயே இதுதான் அதிக சதவீதத்திலான வாக்குப்பதிவு ஆகும். வாக்காளர்களின் எண்ணிக்கை இந்த தேர்தலில் 30 லட்சம் என்ற மிதமான உயர்வே இருந்தது. ஆனாலும் இதில் பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் ஜனநாயக கடமையாற்ற தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி முதல்முறை வாக்காளர்களும், இளம் வாக்காளர்களும் அலை அலையாய் வாக்குச்சாவடிகளில் வந்து வாக்களித்தனர். வெளிநாடுகளில் இருந்து கடல் கடந்து விமானத்தில் பறந்து வந்தும், வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வந்தும் என நிறைய பேர் வாக்களித்து தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

இளைய தலைமுறை மட்டுமல்லாமல் மூத்தகுடிமக்கள், பெண்கள், நடுத்தர வயதினர் என்று நிறைய பேர் நீண்ட வரிசையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வியர்வை வழிந்தோட 'கியூ'வில் நின்று வாக்களித்தனர். ஆபரேஷனுக்கு சென்ற டாக்டர் கூட வாக்களித்துவிட்டுதான் சென்றார். இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி'யில் பிரசுரமாகியிருந்தது. ஜனநாயக கடமையாற்றுவதில் சினிமா நட்சத்திரங்களின் பங்களிப்பும் இந்த முறை சிறப்பானதாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் வாக்காளர்களும், பதிவான வாக்குகளும் அதிகம். தேர்தலில் ஓட்டுப்போடவேண்டும், மனம் விரும்பிய வேட்பாளர்களை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற தணியாத ஆர்வம் காரணமாக ஒரு உற்சாக வாக்குப்பதிவாக இருந்தது. வாக்காளர்களின் இந்த ஆர்ப்பரிப்பு மே 4-ந்தேதி தேர்தல் முடிவு அறிவிக்கும்போது தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com