

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் சாகுபடி
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் எண்ணற்ற பேர் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு நெல், கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்பொழுது வத்திராயிருப்பில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை மிகவும் எளிதாக கொள்முதல் செய்து விடுகின்றனர்.
ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில விவசாயிகள் அதிக பணம் செலவழித்து வத்திராயிருப்புக்கு கொண்டு செல்கின்றனர்.
கொள்முதல் நிலையம்
ஆதலால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மம்சாபுரம் அல்லது மல்லியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் வடமலைக்குறிச்சி விவசாய சங்க தலைவர் கோவிந்தராஜ் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் வத்திராயிருப்பிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மம்சாபுரம் அல்லது மல்லியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.