

தாமரைக்குளம்:
தடையில்லா சான்றிதழ்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். இதில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அரியலூர் மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசுகையில், இலவச மின்சார இணைப்பிற்காக விவசாயிகளை அழைக்கழிக்காமல் உடனடியாக அவர்களுக்கு தடையில்லா சான்றிதழை வழங்க வேண்டும்.
கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்து வாய்க்கால், பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை அளவீடு செய்து தூர்வார வேண்டும். கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், என்றார்.
பயிர்க்கடன்
இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் வாரணவாசி ராசேந்திரன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் எடை போடப்படாமலேயே தேங்கி கிடக்கின்றன. வெயில், மழை, பனியினாலும், கால்நடைகளாலும் நெல்மணிகள் சேதமடைகின்றன. எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதையாற்றின் கரைகள் மற்றும் ஆற்றின் மையப்பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும், என்றார்.
அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து பேசுகையில், ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு காலதாமதமின்றி அனுமதி அளிக்க வேண்டும். தட்டுப்பாடின்றி மின்சாரம் வழங்க வேண்டும். பயிர் கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைனின் பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்தே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.35, ரூ.40 வாங்குவதை தடுக்க வேண்டும், என்றார்.
கண்டனம் தெரிவித்து மனு
இதைத்தொடர்ந்து விவசாயிகள் சங்கர், விஜயகுமார், தியாகராஜன் உள்பட பலர் பேசினர். முன்னதாக அரியலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகளுடன், சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளை அழைக்காததற்கு கண்டனம் தெரிவித்து, அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், அவை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனர் பழனிசாமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.