

ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 35), பெயிண்டர். இவரது மனைவி அமுதா (30). நேற்று முன்தினம் மாலை ஞானசேகரன் நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக மனைவியிடம் கூறி சென்றார்.
ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து அமுதாவிற்கு போன் வந்தது. அதில் பேசியவர்கள், உங்களது கணவர் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் காயங்களுடன் கிடந்தார். அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார் என்று தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அமுதா, உறவினர்களை அழைத்துக்கொண்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஞானசேகரனை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் ஞானசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், தாக்கப்பட்டதால் தான் அவர் இறந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.