பான்செக்கர்ஸ் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா: நல்ல சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களால் தான் முடியும் முன்னாள் துணைவேந்தர் பேச்சு
தஞ்சாவூர்,
தஞ்சை விளார் பகுதியில் உள்ள பான்செக்கர்ஸ் கல்வியியல் கல்லூரியின் 10வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் மரியபிலோமி தலைமை தாங்கினார். செயலாளர் மரியம்மாள் அறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் அறிவாளன் வரவேற்றார்.
விழாவில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய ஆலோசகரும், பாரதியார் மற்றும் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
உங்களின் படிப்புக்கு தரும் மரியாதை தான் பட்டமளிப்பு. நீங்கள் பெற்ற கல்வியை கொண்டு மாணவர்களுக்கு அறிவு வெளிச்சத்தை பரப்ப வேண்டும். மனிதனுக்கு மேன்மை தருவது கல்வி. நல்ல சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும். ஆசிரியர்களின் ஒவ்வொரு செயலும் மாணவர்களை மையப்படுத்தி இருக்க வேண்டும். உங்களால் சாதிக்க முடியும் என்று எண்ணி செயல்படுங்கள். நீங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தாலும் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், பிறந்த ஊரை என்றைக்கும் மறக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பி.எட் மற்றும் எம்.எட். பட்டதாரிகள் 133 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழக அளவிலும், கல்லூரி அளவிலும் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

