'பூங்கா' நல்லது..!

செடி, கொடிகளால் மன அழுத்தம், கோபம் மற்றும் மன உளைச்சல் போன்றவை குறைகிறது .
'பூங்கா' நல்லது..!
Published on

நகர்ப்புறங்களில் பசுமையான செடி, கொடிகளும், தோட்டங்களும், பூங்காக்களும் அதிகம் இருந்தால் அதன் மூலம் அந்த நகரங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என பிரிட்டன் ராயல் காலேஜ் ஆப் பிசிஷியன்ஸின் தலைவரான மருத்துவர் சர்.ரிச்சர்ட் தாம்சன் கூறியுள்ளார். செடி, கொடிகளால் மன அழுத்தம், கோபம் மற்றும் மன உளைச்சல் போன்றவை குறைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் பொதுவாக நிகழும் மரணங்களுக்கு நான்காவது பெரிய காரணியாக இருப்பது போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதுதான் என்றும், இந்த நிலையை மாற்ற நகர்ப்புறங்களில் அதிக அளவில் தோட்டங்கள் அமைத்தால் அவற்றில் மனிதர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்து உடலை பேணிக் காப்பாற்ற வசதியாக இருக்கும் என்றும் தாம்சன் கூறியுள்ளார். லண்டனில் பசுமை நகரங்கள் தொடர்பாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கம் ஒன்றில்தான் அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பசுமையான தோட்டங்கள், பூங்காக்கள் போன்றவை நகர்ப் புறங்களில் இருந்தால் அவற்றால் ஏராளமான நன்மைகள் மனிதர்களுக்கு ஏற்படும் என பல்வேறு ஆராய்ச்சிகள் முன்பே தெரிவித்திருந்தாலும் இதற்கான முன்னெடுப்புகள் சுகாதாரத்துறை திட்டங்களுக்குள் சேர்க்கப்படுவதில் கவனம் செலுத்தப்படுவதில்லை.

அமெரிக்காவில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், மருத்துவமனைகளில் பசுமையான தோட்டங்களை அமைப்பதால், நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே பெருமளவு மன அழுத்தம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தோட்டங்களில் விதவிதமான செடிகள் இருப்பது அவசியம்.

மேலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பசுமையான தோட்டங்களை பார்ப்பதால், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வரும் படபடப்பு வெகுவாகக் குறைவதாகவும், இதனால் அவர்களுக்கான மருந்தின் தேவையும் குறைவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று தோட்டத்தில் வேலை செய்வதால் உடல், மனம் இலகுவாகிறது; மேலும் தடுமாற்றம் இல்லாமல் நடக்க முடிகிறது; இதனால் தனியாக வீட்டில் இருக்கும் வயதானவர்கள் தடுமாறி வீட்டிற்குள் விழுந்து விடுவது குறைகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், சூரிய ஒளி உடலில் பட்டால், அதனால் ரத்தக் கொதிப்பு குறைவதும் தெரிய வந்துள்ளது. இவ்வளவு நன்மை நிறைந்த பசுமை பூங்காக்களையும், தோட்டங்களையும் அமைத்தால் அது சுகாதாரத்துறைக்காக அரசு செலவிடும் தொகையில் ஏராளமான சேமிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சர் ரிச்சர்ட் தாம்சன் கூறியுள்ளார். ஆனால் இது ஒரு நாட்டுக்கானது மட்டுமல்ல; மனித சமூகம் முழுவதற்குமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com