பா.ஜனதா தேர்தல் அறிக்கை முரண்பாடுகளின் மொத்த உருவம் - ப.சிதம்பரம்


பா.ஜனதா தேர்தல் அறிக்கை முரண்பாடுகளின் மொத்த உருவம் - ப.சிதம்பரம்
x

கோப்புப்படம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசும் இவர்கள் ஏன் காஷ்மீருக்கு தேர்தல் நடத்தவில்லை என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

சிவகங்கை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காரைக்குடியில் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி நடப்பு திட்டங்களையே தேர்தல் அறிக்கையில் மீண்டும் கூறியுள்ளது. புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. 5 கோடி பேர்தான் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் ஏழைகள் என்று அறிவித்து 20 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கி வருகின்றனர். முரண்பாடுகளின் மொத்த உருவமாக அவர்களது தேர்தல் அறிக்கை இருக்கிறது.

அனைத்து வீடுகளுக்கும் பைப்லைன் மூலம் கியாஸ் வினியோகம் செய்வதாக கூறுகின்றனர். ஆனால், வீடுதோறும் குடிநீரைக்கூட இதுவரை அவர்களால் வழங்க முடியவில்லை. ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளதாகவும் மேலும் 3 கோடி பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அவர்களது கணக்கின்படி பார்த்தால் இந்தியாவில் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் 52 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், சிவகங்கை மாவட்டத்தில் அவ்வாறு கட்டி கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை மக்கள்தான் பார்க்க வேண்டும்

பண மதிப்பு இழப்பு, கொரோனா தாக்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களை மீட்டெடுப்போம் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு வங்கிகள் கடன் தர தயாராக இல்லை.

நாட்டில் ரூ.11 ஆயிரத்து 127 கோடி கல்விக்கடன் உள்ளது, இதில் ரூ.412 கோடி வராக்கடனாகவும் உள்ளது. இதனை தள்ளுபடி செய்ய முடியாது என பா.ஜனதா தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள பெருமுதலாளிகளுக்கு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 41 ஆயிரத்து 974 கோடி கடனை ரத்து செய்துள்ளது. இதனை வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கின்றனர். இதிலிருந்து அவர்களுக்கு தமிழ் மொழி மீதான அக்கறையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசும் இவர்கள் ஏன் காஷ்மீருக்கு தேர்தல் நடத்தவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story