பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது: ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி


பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது:  ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 17 April 2024 5:13 AM GMT (Updated: 17 April 2024 5:17 AM GMT)

வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட விவகாரத்தில் இருந்து திசை திருப்பும் வேலையில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

காசியாபாத்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியின்போது, இந்த தேர்தல் கருத்தியல் சார்ந்தது. ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் ஆகியோர் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக நடைமுறையை அழிக்க முயற்சித்து வருகின்றனர். மறுபுறம், இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாக்க முயற்சித்து கொண்டிருக்கிறோம்.

இந்த தேர்தலில் 2 முதல் 3 பெரிய விவகாரங்கள் முன்னே உள்ளன. இதில், வேலைவாய்ப்பின்மை மிக பெரியது. பணவீக்கம், 2-வது பெரிய விவகாரம். ஆனால், பா.ஜ.க.வோ இவற்றில் இருந்து திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரங்கள் பற்றி பிரதமரோ அல்லது பா.ஜ.க.வோ பேசுவதேயில்லை என்று கூறினார்.

இந்த மக்களவை தேர்தலின் முடிவு பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், தொகுதிகளை பற்றி நான் கணிக்க முடியாது. 15 முதல் 20 நாட்களுக்கு முன் பா.ஜ.க. 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என நான் நினைத்தேன். ஆனால், 150 தொகுதிகளுக்கு மேல் அவர்களுக்கு கிடைக்காது என்றே தற்போது நினைக்கிறேன்.

ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வரும் அறிக்கைகளில், நாங்கள் முன்னேறி வருகிறோம் என தெரிய வந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஒரு வலுவான கூட்டணி உள்ளது. நாங்கள் சிறந்த முறையில் வெற்றி பெறுவோம் என்று பேசியுள்ளார்.


Next Story