பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் - தென்காசியில் சீமான் பேச்சு


பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் - தென்காசியில் சீமான் பேச்சு
x

பணம் கொடுத்து வாக்கு வாங்கும் நிலை வந்தால் அரசியலை விட்டுவிட்டு, வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

தென்காசி,

நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

"நூறு கோடி, 150 கோடி என செலவழித்து, வாக்குக்கு காசு கொடுத்து, வாக்கை வாங்குகிற நிலையில், நாம் தமிழர் கட்சி இல்லை. அப்படிப்பட்ட அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு வந்தால், இந்த வேலையை விட்டுவிட்டு வேளாண்மை செய்ய சென்றுவிடுவோமே ஒழிய, இதை தொடர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

ஒரு துண்டறிக்கை அடித்துக் கொள்ள, ஒரு பதாகை அடித்துக் கொள்ள, ஒரு கொடி அச்சிட, எரிபொருள் நிரப்பிக்கொள்ள, தங்கும் விடுதிகளுக்குக் பணம் கொடுக்க கூட முடியாத வசதி இல்லாத நாங்கள் எப்படி இந்த ஜனநாயகத்தில் கொழுத்துப் பெருத்த, பல ஆண்டுகாலம் அதிகாரத்தை அனுபவித்த கட்சிகளுடன் மோதுவது, அவர்களை முட்டித் தகர்த்து வெல்வது என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சிகள் இதுவரை செய்யாத ஒரு நன்மையை அடுத்து வருகிற காலத்தில் எப்படி செய்வார்கள் என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைந்த பயிர்களை ஒரே நாளில் அறுத்து முடித்த விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான். ஆனால், இன்று ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த கதிரை என் தாய் ஒரு வாரம் அறுக்கிறார். தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் பறிக்க ஆட்கள் இல்லாத நிலை உருவாகி உள்ளது. வேளாண்மையை விட்டு விவசாயிகள் வெளியேறுகிற துயர நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.


Next Story