அக்னிவீர் திட்டத்தை 'இந்தியா' கூட்டணி குப்பையில் வீசும் - ராகுல் காந்தி


Rahul Gandhi said INDIA will trash Agniveer scheme
x

Image Courtesy : ANI

‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைத்த பிறகு ‘அக்னிவீர்’ திட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் மகேந்திரகர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அரசின் 'அக்னிவீர்' திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது;-

"தேசத்திற்காக தியாகம் செய்பவர்களை பா.ஜ.க. இரண்டாக பிரிக்கிறது. ஒரு பிரிவில் சாதாரண ராணுவ அதிகாரிகள். அவர்களுக்கு ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து மற்றும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். மற்றொரு பிரிவில் அக்னிவீரர்கள். அவர்களுக்கு தியாகி அந்தஸ்து, ஓய்வூதியம், கேன்டீன் வசதி என எந்த சலுகையும் கிடையாது.

இந்த 'அக்னிவீர்' திட்டத்தை பிரதமர் மோடிதான் கொண்டு வந்தார். அது இந்திய ராணுவத்தின் திட்டம் கிடையாது. இந்திய ராணுவத்திற்கு அந்த திட்டம் தேவையும் இல்லை. 'இந்தியா' கூட்டணி ஆட்சியமைத்த பிறகு 'அக்னிவீர்' திட்டம் குப்பைத் தொட்டியில் வீசப்படும்.

இந்தியாவின் எல்லைகள் இந்த நாட்டின் இளைஞர்களால் பாதுகாக்கப்படுகிறது. நமது இளைஞர்களின் மரபணுவில் தேசப்பற்று உள்ளது. பிரதமர் மோடி ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மாற்றிவிட்டார்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.


Next Story