சென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடக்கம்


சென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடக்கம்
x

கோப்புப்படம் 

சென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடங்க உள்ளது, இந்த பணியில் 67 குழுக்கள் ஈடுபடுகின்றனர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 11 ஆயிரத்து 369 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 63 ஆயிரத்து 751 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களும் என மொத்தம் 75 ஆயிரத்து 120 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக கடந்த மாதம் 17-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையில் '12டி' படிவம் வழங்கப்பட்டது. வீடு விடாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் படிவம் வழங்கப்பட்டு, பின்னர் நிரப்பிய படிவங்கள் பெறப்பட்டது.

அதில் 85 வயதுக்கு மேற்பட்டோர் 4 ஆயிரத்து 175 பேரும், மாற்றுத்திறனாளிகள் 363 பேரும் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். விருப்பம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு உரிமையை வழங்கும் வகையில் தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம்

அதன்படி தபால் வாக்குபதிவானது இன்று (திங்கட்கிழமை) முதல் 13-ந் தேதி வரையில் நடைபெறவுள்ளது. காலை 10.30 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இந்த பணிக்காக சென்னையில் 67 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் வீடு வீடாக சென்று 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குச் சீட்டினை வழங்கி, வாக்குப்பதிவு செய்யும் முறையை தெளிவாக எடுத்து கூறி, பதிவு செய்யப்பட்ட வாக்குச் சீட்டு மற்றும் உறுதிமொழி படிவம் போன்றவற்றை திரும்ப பெறுகின்றனர். இந்த பணியில் ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் ஈடுபடவுள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச் சீட்டு உள்ள பெட்டியை 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கபடவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story