விவசாயி உள்ளிட்ட மனித சின்னங்களை ஒதுக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு எதிர்ப்பு


விவசாயி உள்ளிட்ட மனித சின்னங்களை ஒதுக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு எதிர்ப்பு
x

கோப்புப்படம்

மனுதாரர் அரசியல் செயல்பாட்டாளராக இருப்பதால், இதுபோன்ற பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

கோவையை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஜெகன் சார்பில் வக்கீல் ஏ.எஸ்.வைரவன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'விவசாயி உள்ளிட்ட மனிதர்கள் தொடர்புடைய சின்னங்களை அரசியல் கட்சிக்கு அளித்தால் அவற்றால் வாக்காளர்கள் தவறாக வழி நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற மனிதர்கள் தொடர்புடைய தேர்தல் சின்னங்களை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜஷ்வந்தி அன்புசெல்வன் ஆஜராகி வாதிட்டார்.

வாதங்களை நிராகரித்த நீதிபதிகள், 'மனுதாரர் அரசியல் செயல்பாட்டாளராக இருப்பதால், இதுபோன்ற பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. பொதுநல மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்கிறோம். இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனுவாக அளிக்கவும் அனுமதி அளிக்கிறோம்' என்று தெரிவித்தனர்.


Next Story