மதுராவில் மீண்டும் போட்டியிடுவது ஏன்? - நடிகை ஹேமமாலினி விளக்கம்


மதுராவில் மீண்டும் போட்டியிடுவது ஏன்? - நடிகை ஹேமமாலினி விளக்கம்
x

நான் சில சேவைகள் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புவதால் இங்கு நிற்கிறேன் என்று ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

மதுரா,

பாலிவுட்டில் "கனவுக்கன்னி" என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது, தொடர்ந்து 3-வது முறையாக மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் காண்கிறார். 75 வயது ஆனவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற எழுதப்படாத விதியை தளர்த்தி, 75 வயதான ஹேமமாலினிக்கு பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில், நடிகை ஹேமமாலினி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் முதன்முதலில் மதுரா தொகுதியில் எம்.பி. ஆனபோது, சினிமா நடிகை என்ற முறையில் என் மீது மக்களுக்கு ஈர்ப்பு இருந்தது. முதலில், வெளியூர்காரர் என்ற பிரச்சினை காணப்பட்டது. தொகுதிக்கு அடிக்கடி வரமாட்டார் என்று பேசினார்கள்.

அதை பொய்யாக்கும் வகையில், மதுராவில் பிருந்தாவன் பகுதியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறேன். இப்போது வெளியூர்காரர் என்ற பிரச்சினை இல்லை. எனது முதல் பதவிக்காலத்தில் எனக்கு என்ன வேலை என்றே தெரியவில்லை. பிறகுதான் படிப்படியாக தெரிந்து கொண்டேன்.

நான் அனுபவம்வாய்ந்த அரசியல்வாதி அல்ல. ஆனால், எம்.பி.யாக இருந்தால், நான் விரும்பிய பணிகளை செய்ய முடியும். நான் அரசியலில் குதிக்க விரும்பியது இல்லை. தெய்வ அனுக்கிரகத்தால் அது நடந்தது. நான் கிருஷ்ணர் பக்தை. நான் சில சேவைகள் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்புவதால் இங்கு நிற்கிறேன். மதுரா இல்லாவிட்டால், நான் நின்றிருக்க மாட்டேன்.

மதுரா தொகுதிக்கான எனது கனவு இன்னும் பாக்கி இருக்கிறது. அந்த முடிவடையாத பணிகளை முடிக்க மீண்டும் போட்டியிட விரும்பினேன். கட்சி வாய்ப்பு கொடுத்துள்ளது. அதற்காக பா.ஜனதாவுக்கு நன்றி.

பிரதமர் மோடி-ஹேமமாலினி கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள். பிரதமர் மோடி நாடு முழுவதும் செய்த பணிகள் ஓட்டு பெற்றுத்தரும். நான் செய்த பணிகள் தெரிய வேண்டுமானால், தொகுதியை சுற்றி பாருங்கள். நான் பிராமண பெண். ஜாட் இன மருமகள். அதனால், ஜாட் சமூகத்தினர் நிறைந்த இத்தொகுதியில் ஆதரவு இருக்கிறது.

நடிகை, பரத நாட்டிய கலைஞர், அரசியல்வாதி என எனக்கு 3 முகங்கள் இருக்கின்றன. இப்போதும், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். மக்களுக்கும் பிடித்து இருக்கிறது. சினிமாவில் நல்ல வேடங்கள் வரும்போது நடிப்பேன். 3 முகங்களும் எனது மனதுக்கு நெருக்கமானவை.

இத்தேர்தலில் ராமர் கோவில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். கிருஷ்ண ஜென்மபூமி பிரச்சினை, கோர்ட்டில் இருப்பதால் அதுபற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story