

மும்பை,
மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கரப்பான் பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருப்பதாகவும், ரெயிலும் அசுத்தமாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கரப்பான் பூச்சி, எலி தொல்லை
மும்பை சி.எஸ்.எம்.டி.- நாகர்கோவில் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பெரும்பாலான நாட்கள் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதேபோல மும்பை- நாகர்கோவில் ரெயிலில் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் புகார் தெரிவித்து உள்ளனர்.
ரெயில் பெட்டிகள் சுத்தமாக இல்லை, கழிவறைகளில் தண்ணீர் இருப்பதில்லை, தரமான உணவு வழங்கப்படுவதில்லை என புகார்களை அடுக்கி உள்ளனர்.
இதுதொடர்பாக சமீபத்தில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊர் சென்று திரும்பிய செம்பூரை சேர்ந்த லட்சுமி என்ற 70 வயது பயணி கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன் தான் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மும்பைக்கு வந்தேன். ரெயில் மிகவும் அசுத்தமாக இருந்தது. குறிப்பாக கரப்பான் பூச்சிகள், எலி தொல்லை அதிகமாக இருந்தது. எனது 3 பேரக்குழந்தைகள் கரப்பான் பூச்சி கடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற்றோம். இதேபோல எலித்தொல்லையும் அதிகமாக இருந்தது. எலிகள் எங்கள் பொருட்களை கடித்து சேதப்படுத்தியது.
கழிவறையில் தண்ணீர் இல்லை
கழிவறைகளில் தண்ணீர் இல்லை. 75 வயதான என் கணவர் பல பெட்டிகள் கடந்து சென்று கழிவறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல வடஇந்தியர்கள் பாக்கு போட்டு துப்புவதால் வாஷ் பேஷன் அடைத்து கொண்டது. இதன்காரணமாக வாஷ் பேஷனில் தண்ணீர் நிரம்பி இருந்தது. அது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. கழிவறையும் முறையாக சுத்தம் செய்யப்படாமல் மிகவும் மோசமாக இருந்தது. நாங்கள் மும்பை வரும் வரை ரெயில் பெட்டி சுத்தம் செய்யப்படவே இல்லை. நான் ஊருக்கு போகும் போதும் ரெயில் அசுத்தமாகவே இருந்தது. ரெயில் தான் அசுத்தம் என்றால், வழங்கப்படும் உணவும் மிகவும் மோசமாக இருந்தது. நாம் ஒருநாளுக்கு வேண்டுமானால் சாப்பாடு எடுத்து செல்லலாம். 2-வது நாள் கேண்டீனில் தான் வாங்க வேண்டிய நிலை உள்ளது. கேண்டீனில் தரமான உணவு வழங்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நான் சமீபத்தில் குஜராத்துக்கு ரெயிலில் சென்றேன். அந்த ரெயில் சுத்தமாக இருந்தது. ஆனால் தமிழ்நாடு செல்லும் ரெயில் மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என தெரியவில்லை. எனவே ரெயில்வே நிர்வாகம் மும்பை- நாகர்கோவில் ரெயிலில் எலி, பூச்சி தொல்லையை மருந்து அடித்து தீர்க்க வேண்டும். ரெயிலை சுத்தமாக வைத்து தண்ணீர் எப்போதும் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பாவது எங்களுக்கு (மூத்த குடிமக்கள்) சலுகை இருந்தது. இப்போது முழு டிக்கெட் பணமும் வாங்குகிறார்கள். அதற்கு ஏற்றார் போல ரெயிலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அல்லவா?.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "மும்பை- நாகர்கோவில் ரெயிலை கழுவி சுத்தம் செய்யும் பணி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தான் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.
சுத்தம் செய்ய வேண்டும்
இதுதொடர்பாக மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் அப்பா துரை கூறுகையில், "மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் பூச்சி கொல்லி மருந்து தெளித்து முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டும். நாகர்கோவில் ரெயில் நிலைய மேலாளர், திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் இதை உறுதி செய்ய வேண்டும். மத்திய ரெயில்வேயால் பராமரிக்கப்படும் மும்பையில் இருந்து புறப்படும் பிற ரெயில்கள் சுத்தமாக உள்ளது. எனவே மத்திய ரெயில்வே போல தெற்கு ரெயில்வேயும் ரெயிலை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
இதேபோல மும்பை வந்தவுடன் முடிந்த வரை மத்திய ரெயில்வேயும் ரெயிலை நன்றாக துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் சுத்தமாக வைத்திருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.