

திருச்சி, ஆக.31-
திருச்சி மாநகரில் முககவசம் அணியாத, போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிறப்பு வாகன சோதனை மையம்
கொரோனா தொற்று பரவலை தடுத்திடும் வகையில் கடந்த 23-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சார்பில் நேற்று முன்தினம் மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அண்ணாசிலை ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம், மாம்பழச்சாலை சந்திப்பு, காந்திமார்க்கெட் சந்திப்பு, மேலப்புதூர் சந்திப்பு, தலைமை தபால்நிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
ரூ.6 லட்சம் அபராதம்
நேற்று முன்தினம் அரசின் தடை உத்தரவை மீறி முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 1200-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 30 நபர்கள், சாலை விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமலும், சீட்பெல்ட் அணியாமலும் வந்த வாகன ஓட்டிகள் 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கூறி உள்ளார்.