போலீஸ் அதிகாரிகளின் மன உறுதியை குலைக்க ரிட் மனுக்கள் தாக்கல் செய்கின்றனர்-மதுரை ஐகோர்ட்டு கண்டனம்

போலீஸ் அதிகாரிகளின் மன உறுதியை குலைக்க ரிட் மனுக்கள் தாக்கல் செய்கின்றனர் என்று மதுரை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்த ஊராட்சி தலைவிக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
போலீஸ் அதிகாரிகளின் மன உறுதியை குலைக்க ரிட் மனுக்கள் தாக்கல் செய்கின்றனர்-மதுரை ஐகோர்ட்டு கண்டனம்
Published on

மதுரை,

போலீஸ் அதிகாரிகளின் மன உறுதியை குலைக்க ரிட் மனுக்கள் தாக்கல் செய்கின்றனர் என்று மதுரை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்த ஊராட்சி தலைவிக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஊராட்சி தலைவியின் ரிட் மனு

விருதுநகர் மாவட்டம் பாப்பணம் ஊராட்சி தலைவி அமுதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மாசி களரியையொட்டி எங்கள் குடும்ப கோவிலான முனியப்பசாமி கோவிலுக்கு சென்றோம். அங்கு தேர்தல் முன்விரோதம் காரணமாக முனியசாமி என்பவர் என் கணவரை தாக்கினார். இதுதொடர்பாக மறுநாள், அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, எனது கணவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு நான் சென்றபோது என்னை தகாத வார்த்தைகளால் பேசியும், சாதியை சொல்லியும் திட்டினார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் தரப்பினருக்கும் எதிர்தரப்பினருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரின் புகாரின்பேரில் 2 வழக்குகள் பதிவு செய்து, மனுதாரர் கணவர் உள்பட இருதரப்பிலும் சிலரை போலீசார் கைது செய்தனர். ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மனுதாரர் உண்மைக்கு புறம்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். பொது அதிகாரியை மிரட்டும் வகையிலான மனுதாரரின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வாதாடினார்.

சந்தேகம்

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சம்பவம் நடந்து 13 நாட்கள் கழித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி உயர் அதிகாரிகளுக்கு மனுதாரர் புகார் மனுவை அனுப்பியது ஏன்? என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மனுதாரர் ஒரு ஊராட்சியின் தலைவி. அவர் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். அவரது கணவருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் அதை சட்டப்படி அணுகியிருக்க வேண்டும். சிலர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யும்போக்கு அதிகரித்து வருகிறது.

தடுக்கும் தந்திரம்

உயர் அதிகாரிகள் இதுபோன்ற மனுக்களின்பேரில் உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே முறையாக விசாரிக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளின் மன உறுதியை குலைப்பதற்காகவும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகவும்தான் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை கோரி ரிட் மனுக்களை தாக்கல் செய்கின்றனர். இது, போலீஸ் அதிகாரிகளின் செயல்பாட்டையும், விசாரணையையும் தாமதப்படுத்துவதற்கான ஒரு தந்திரமாகும். இதை ஊக்குவிக்க முடியாது. அந்த வகையில் மனுதாரருக்கு சாதகமாக இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை அவர் 2 வாரத்தில் அபிராமம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் செலுத்த வேண்டும். இந்த தொகை, போலீஸ்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படும் வகையில் செலவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com