அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் அபராதம்

புதுவையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்தார்.
அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் அபராதம்
Published on

புதுச்சேரி

புதுவையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்தார்.

அபராதம்

புதுவையில் வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்துகள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக 4 ஸ்பீடு கன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவது குறித்து பஸ் நிலையம் அருகே இன்று போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கீர்த்திவர்மன், கணேசன், முத்துக்குமார் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:-

அதிக வேகத்தில்...

புதுவை சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதாவது மோட்டார் சைக்கிள்கள், கார்களுக்கு ரூ.1,000-மும், வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும், பந்தயங்களில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

இதற்காக புதுவை சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. புதுவை கடற்கரை சாலை பகுதியில் மணிக்கு 20 கி.மீ. வேகத்திலும், டவுண் பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் சாலை, சுப்பையா சாலை, அண்ணாசாலை, கடலூர் சாலை (வெங்கடசுப்பாரெட்டியார் சிலை முதல் அரியாங்குப்பம் பாலம் வரை), கடற்கரை சாலை முதல் வில்லியனூர் ஆரியபாளையம் பாலம் வரை, காமராஜர் சாலை, ராஜீவ்காந்தி சிலை முதல் பாண்லே வரை மரப்பாலம் சந்திப்பு முதல் முத்தியால்பேட்டை மார்க்கெட் வரை 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்கவேண்டும்.

50 கி.மீ. வரை...

அரியாங்குப்பம் பாலம் முதல் முள்ளோடை சந்திப்பு வரை, ஆரியபாளையம் பாலம் முதல் மதகடிப்பட்டு எல்லை வரை, முத்தியால்பேட்டை மார்க்கெட் முதல் கனகசெட்டிகுளம் எல்லைவரை, 50 கி.மீ. வேகம் வரை இயக்கலாம். அதேநேரத்தில் இந்த பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், மார்க்கெட் பகுதிகளில் 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com