

உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் உள்ள கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் படகு மூலம் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர். மேலும் கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா என்று மலை வாழ்மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மழைவாழ் மக்கள்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுதவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
மலைவாழ் மக்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக சமதளபரப்பிற்கு சென்றுவர வேண்டி உள்ளது. ஒருசில மலைவாழ் குடியிருப்புகளை தவிர மற்ற பகுதியில் பாதை அமைக்கப்படவில்லை.
காட்டாற்று வெள்ளம்
இதனால் வன விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கின்ற மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் வழியாக மலைவாழ் மக்கள் மருத்துவம், கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்வதற்கு முடியாமல் மலைவாழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பாலம் கட்ட வேண்டும்
அதைத்தொடர்ந்து மழைக்காலங்களில் மலைவாழ் மக்கள் மாற்று வழிப்பாதையாக கேரள மாநிலத்திற்கு உட்பட்ட சம்பகாட்டு பகுதியில் உள்ள காட்டுப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். அந்த பாதையையும் கேரளா வனத்துறையினர் முன்னறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது திடீரென அடைத்து கொள்வதாக கூறப்படுகிறது.
இதனால் மலைவாழ் மக்கள் பருவமழை காலங்களில் கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றபோது சமவெளிப் பகுதிக்கு சென்று வர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதைத்தொடர்ந்து கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை.
தனித்தீவாக
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அமராவதி வனப்பகுதியில் 3 ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுமட்டுமின்றி சம்ப காட்டு வழிப்பாதையின் குறுக்காக செல்கின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் தனித்தீவாக மாறியுள்ளது.
கயிறு கட்டி படகு மூலம் பயணம்
இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசரகால சிகிச்சைக்கு கூட மலைவாழ் மக்கள் சமதளபரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டாற்றின் குறுக்காக மலைவாழ் மக்கள் கயிறு கட்டி அதை பிடித்தவாறு படகின் மூலம் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர்.
தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் ஆற்றை கடந்து செல்லும் போது பெருத்த இன்னல்களை சந்தித்து வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் திடீரென வெள்ளத்தின் போக்கு அதிகரித்தால் படகு நிலை தடுமாறி ஆற்றுக்குள் கவிழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் சூழலும் நிலவுகிறது. எனவே கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.