பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றவர்களுக்கு வலைவீச்சு

பட்டுக்கோட்டையில், பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றவர்களுக்கு வலைவீச்சு
Published on

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மேலத்தெரு கோரிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 37). தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜனதா முன்னாள் பிரசார பிரிவு தலைவரான இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது வீட்டில் இருந்தார்.

அப்போது ராஜ்குமாரின் வீட்டின் முன்பு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம மனிதர்கள் திடீரென பெட்ரோல் குண்டை ராஜ்குமார் வீட்டின் மீது வீசி விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது

பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. இந்த சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த ராஜ்குமார், மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

முன்விரோதமா?

இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளையும் பார்வையிட்டனர். மேலும் வெடித்து சிதறி கிடந்த பெட்ரோல் குண்டின் பாகங்களையும் சேகரித்தனர்.

ராஜ்குமாருக்கும் அப்பகுதியை சேர்ந்த யாருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் குறித்த எந்தவித தகவலும் முதற்கட்ட விசாரணையில் கிடைக்கவில்லை.

வலைவீச்சு

இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com