செல்லப் பிராணிகள் வளர்ப்பிலும் சம்பாதிக்கலாம்..

இடவசதி என்பது ஒரு விஷயமே இல்லை. வீட்டுக்கு வெளியே சிறிய இடம் இருந்தாலும் கூண்டு போன்ற அமைப்பை ஏற்படுத்தி வளர்க்கலாம். மொட்டைமாடி அல்லது பால்கனியில் கூட சிறிய அளவில் வளர்க்க முடியும்.
செல்லப் பிராணிகள் வளர்ப்பிலும் சம்பாதிக்கலாம்..
Published on

செல்லப்பிராணிகள் வளர்ப்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்றாகும். அவற்றுடன் விளையாடுவது, பராமரிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் முயல்கள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது மட்டுமில்லாமல், அவற்றின் மூலம் வருமானமும் ஈட்டி வருகிறார் சென்னையைச் சேர்ந்த வைஷாலி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், பகுதி நேரமாக இதனைச் செய்து வருகிறார். அவரது பேட்டி…

முயல்கள் வளர்ப்பதில் ஆர்வம் எப்படி வந்தது?

எனக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். முயல்கள், மீன்கள், பசுமாடுகள், கருங்கோழி, நாட்டுக்கோழி மற்றும் காக்டைல் பறவை முதலியவற்றை வளர்த்து வருகிறேன்.

குடும்ப நண்பர் ஒருவர் முயல்களை எனக்கு பரிசாகக் கொடுத்தார். ஆண்-பெண் என ஒரு ஜோடி முயல்களை ஆசைக்காக வளர்த்தேன். அவை வளர்ந்து எட்டு குட்டிகள் போட்டன. அவற்றை பராமரிப்பதற்காக கூண்டுகள் அமைத்தேன். பின்பு அவை பரிதாக வளர்ந்து குட்டிகள் போட்டன. இவ்வாறு ஆரம்பித்ததே எனது முயல் பண்ணை.

முயல்கள் பராமரிப்புக்கு எவ்வாறு நேரம் ஒதுக்குகிறீர்கள்?

முயல்களை பராமரிப்பது சுலபம்தான். நான் வேலைக்குச் செல்வதன் காரணமாக காலையில் அரை மணி நேரம் ஒதுக்கி கூண்டுகளை சுத்தம் செய்து, அனைத்து முயல்களுக்கும் உணவு வழங்கி விடுவேன். மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் உணவு கொடுப்பேன். முயல்கள் தண்ணீர் குடிப்பதற்காக, கூண்டுடன் பீடிங் பாட்டில் போன்ற அமைப்பை பொருத்தி இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அதை சுத்தப்படுத்தி, தண்ணீர் மாற்றி வைப்பேன்.

குடும்பத்தினர் ஆதரவு எப்படி இருக்கிறது?

ஆரம்பத்தில் என் தந்தைக்கு, முயல்கள் வளர்ப்பதில் விருப்பம் இல்லை. சில நாட்களுக்கு பின்பு, நான் முயல்களை வளர்ப்பது, பராமரிப்பது மற்றும் அதன் மூலம் வரும் வருமானத்தைப் பார்த்து அவருக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. முதலில் நான்தான் முயல்களுக்குத் தேவையான இலை தழைகளைக் கொண்டு வருவேன். இப்போது என் தந்தை முயல்களுக்குத் தேவையான உணவுகளை வாங்கி வருகிறார். எனது தாத்தாவும் முயல்களை பராமரிப்பதில் எனக்கு உதவி செய்கிறார். குடும்பத்தினர் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

நீங்கள் வளர்க்கும் முயல்களை எவ்வாறு விற்பனை செய்கிறீர்கள்?

ஆரம்பத்தில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் முயல்கள் விற்பனைக்கு உள்ளது என்று பதிவிட்டேன். என் நண்பர்கள் அதனைப் பார்த்து வாங்கிச் சென்றனர். பின்பு யூடியூப் சேனலில் 2 வீடியோக்களைப் பதிவு செய்தேன். அதைப் பார்த்து நிறைய வாடிக்கையாளர்கள் என்னிடம் வந்து பெரிய முயல்களையும் வாங்கிச் சென்றார்கள். இவ்வாறு, கடந்த நான்கு வருடங்களாக முயல்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளேன்.

எந்த வகை முயல்களை வீட்டில் வளர்க்கலாம்?

முயல்களில் நிறைய வகைகள் உள்ளன. நியூசிலாந்து ஒயிட், நியூசிலாந்து ஒயிட் ரெட் ஐ, டாட்சு, லைஃப்ஸ்டைல், பிரவுன் ஜெயன்ட், ஒயிட் ஜெயன்ட், சில்சிலா, பிளம்மிஸ் முதலிய முயல்களை வளர்த்து வருகிறேன்.

இடவசதி இல்லாதவர்கள் முயல் வளர்க்க முடியுமா?

இடவசதி என்பது ஒரு விஷயமே இல்லை. வீட்டுக்கு வெளியே சிறிய இடம் இருந்தாலும் கூண்டு போன்ற அமைப்பை ஏற்படுத்தி வளர்க்கலாம். மொட்டைமாடி அல்லது பால்கனியில் கூட சிறிய அளவில் வளர்க்க முடியும்.

எந்த வகை உணவுகளை முயல்களுக்கு கொடுக்கலாம்? அவை எல்லா இடங்களிலும் கிடைக்குமா?

புல்லட் புண்ணாக்கு, அடர்தீவனம், முட்டைகோஸ் இலை, மாவிலை, கீரை வகைகள் போன்றவற்றை உணவாகக் கொடுப்பேன். ஆரோக்கியமாக இருப்பதற்காக வேப்ப இலையையும் அவ்வப்போது வழங்குவேன். எனது முயல்களுக்கு மக்காச்சோளம் மிகவும் பிடிக்கும். அதனையும் உணவுடன் சேர்த்து வழங்குவேன். இவை அனைத்துமே சந்தையில் கிடைக்கக்கூடிய பொருட்களாகும்.

பெண்கள் முழுநேரத் தொழிலாக இதைச் செய்ய முடியுமா?

பெண்கள் இதனை முழுநேரத் தொழிலாகவும் செய்யலாம். முயல்களைப் பராமரிப்பது மற்றும் அதற்கு உணவு வழங்குவது ஆகிய சிறிய வேலைகள் மட்டுமே இருப்பதால், இதனை பகுதிநேர வேலையாகச் செய்வது நல்லது.

உங்களின் மற்ற பொழுதுபோக்குகள் என்ன?

எனது பொழுதுபோக்கு அனைத்துமே செல்லப்பிராணிகள் மட்டுமே. நான் எப்போதுமே முயல் குட்டி மற்றும் காக்டைல் பறவையுடன் நேரத்தைச் செலவிடுவேன்.

உங்கள் எதிர்காலத்திட்டம் பற்றி?

கருங்கோழி, நாட்டுக்கோழி மற்றும் விலங்குகள் வளர்த்து வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆவதே எனது எதிர்காலத் திட்டமாகும்.

உங்களைப் போன்ற இளம்பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

அனைவருக்குமே நிச்சயமாக லட்சியம் இருக்கும். அதை எண்ணமாக மட்டுமே வைத்திருந்தால் நிறைவேற்ற முடியாது. செயலாக செய்து பார்த்தால்தான் லட்சியம் கைகூடும். அதில் வெற்றியும் அடைய முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com