நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம்.
ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் இந்த மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.
நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு அன்னை பூஜை செய்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கின்றன.
இதை நினைவுபடுத்தும் விதமாகவே ஆயுத பூஜை அன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும், நம்முடைய வாழ்விற்கு ஆதாரமாக திகழும் பொருட்களை வைத்து கொண்டாடுகிறோம்.
பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு முன்பு வினை தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும்.
செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். அந்த தொழிலை வணங்க வேண்டிய தினம் தான் ஆயுதபூஜை. பூஜையறையில் புத்தகங்கள், பேனாக்கள் வைத்து பொட்டுவைத்து அலங்கரிக்கவும்.
மேலும் வீட்டு உபயோக்கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி, அரிவாள் போன்றவற்றிலும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும்.தொழில் செய்பவர்கள் உங்கள் தொழிலுக்குரிய இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பின்பு நெய்வேத்தியம் செய்வதற்காக வாழை இலையில் பொரி கடலை, அவல், வடை பாயாசம் மற்றும் பல வகையான பழங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
பிறகு சூடம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபடவும். விபூதி, குங்குமம் மற்றும் பொரிக்கடலை ஆகியவற்றை எல்லாருக்கும் கொடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.